Published : 22 Sep 2020 03:49 PM
Last Updated : 22 Sep 2020 03:49 PM
கள்ளந்திரி பெரியாறு பாசனக் கால்வாய், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குளிக்கக் குவியும் மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயத்திற்காக முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் கட்டப்பட்டது. வைகை அணையில் தேக்கி வைக்கப்படும் முல்லைப் பெரியாறு அணைத் தண்ணீர், இந்தக் கால்வாய் வழியாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயத்திற்குத் திறக்கப்படுகிறது.
சிமெண்ட்டால் கட்டப்பட்ட இந்த நீர்ப்பாசனக் கால்வாய், திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி கிராமம் அருகே வைகை ஆற்றில் இருந்து பிரித்து விடப்படுகிறது. கால்வாய் அதன் பிறகு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைந்து மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கள்ளந்திரி, மேலூரைக் கடந்து சிவகங்கை மாவட்ட எல்லை வரை பல்வேறு கிராமங்களைக் கடந்து செல்கிறது.
இந்தப் பிரதான கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் மூலம் பல்வேறு கிளைக் கால்வாய்கள் வழியாகக் கிராமங்களில் விவசாயிகள், நெல் விவசாயமும் அதைத் தவிர்த்து கரும்பு, வாழை, தென்னை போன்ற விவசாயமும் செய்து வருகிறார்கள். பெரியாறு பாசன பிரதான கால்வாயில் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் மக்கள் வழிநெடுகக் குளிக்கப் படையெடுக்கிறார்கள். இதில் மக்கள் அதிகம் வரும் முக்கியமான கால்வாய்ப் பகுதியாக கள்ளந்திரி பிரதான கால்வாய் உள்ளது.
இந்தக் கள்ளந்திரி பிரதான கால்வாயில் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள். கார், பைக்குகளில் குடும்பத்தோடு வரும் மக்கள், ஆசை தீரக் குளித்துச் செல்கின்றனர். அருகில் உள்ள கிராம மக்கள், இளைஞர்கள் தினமும் இப்பகுதியில் குளிக்க வருகிறார்கள். அதனால், கள்ளந்திரி பெரியாறு பாசனக் கால்வாய் தற்போது சுற்றுலாத் தலம்போல் மாறிவிட்டது.
இப்பகுதியில் குழந்தைகளுடன் குளிக்க வந்த மகேந்திரன் கூறுகையில், ''மற்ற மாவட்டங்களைப் போல் மதுரை மாவட்டத்தில் மக்கள் குளிக்கச் செல்லும் வகையில் அணைகள், நீரோட்டமுள்ள ஆறுகள் இல்லை. வைகை ஆற்றில் ஆண்டிற்கு ஒரு முறை சித்திரைத் திருவிழாவுக்காகத் தண்ணீர் திறக்கப்படுகிறது. குளிக்கிற அளவிற்கு ஆற்றில் தண்ணீரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் குளிக்கிற அளவிற்கு ஆறு சுத்தமாகவும் இல்லை. அதனால், பெரியாறு கால்வாயில் தண்ணீர் வரும் நாட்கள், எங்களுக்குக் கொண்டாட்டமாக உள்ளது. குழந்தைகளும் குளிக்கிற அளவிற்குக் கால்வாயில் வசதிகள் உள்ளன. அதனால், தண்ணீர் வரும் நாட்களில் பெரியாறு பிரதான கால்வாய் மக்களை அதிக அளவு ஈர்க்கிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT