Published : 22 Sep 2020 03:34 PM
Last Updated : 22 Sep 2020 03:34 PM
ஒரு தவறுக்கு இரண்டு முறை தண்டனை அளிப்பதா என்று டாஸ்மாக் பணியாளர்கள் வேதனைத் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (செப். 22) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
“துறைக்குத் தொடர்பில்லாத நபர்களை டாஸ்மாக் கடைகளில் ஆய்வுக்கு அனுப்பக் கூடாது. இதுபோன்ற முறையற்ற ஆய்வுகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், பிற மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும். கரோனா தடை உத்தரவு காலத்தில் ஏற்பட்ட சரக்கு இருப்பு குறைவுக்கு ஏற்கெனவே 2 சதவீத அபராதம் வசூலித்த பிறகும், மீண்டும் 50 சதவீதம் அபராதம் செலுத்தக் கூறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டம் குறித்து சரவணண் கூறும்போது, "கரோனா தடை உத்தரவு காலத்தில் ஏற்பட்ட சரக்கு இருப்பு குறைவுக்கு ஏற்கெனவே 2 சதவீத அபராதத்தை டாஸ்மாக் பணியாளர்கள் செலுத்திவிட்டனர். தற்போது மீண்டும் 50 சதவீதம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளனர். ஒரு தவறுக்கு 2 முறை தண்டனை அளிப்பதா என்று பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, அபராதம் செலுத்தக் கூறியுள்ள உத்தரவை நிர்வாகம் உடனே ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT