Published : 22 Sep 2020 03:06 PM
Last Updated : 22 Sep 2020 03:06 PM
கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வரும் நிலையில், நகர நாகரிகங்களைச் சுற்றியே அகழாய்வு நடத்திக்கொண்டிருக்காமல் தொல்குடிகள் வாழ்ந்த ஊரகப் பகுதிகளுக்கும் அகழாய்வுப் பணிகளை நகர்த்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் தமிழ் மண்ணின் வரலாற்றையே திருத்தி எழுத முடியும் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.
இந்திய வரலாறானது பெரும்பாலும் நகர நாகரிகங்களை மையப்படுத்தியே எழுதப்பட்டு வருகிறது. சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி இன்றைய கீழடி நாகரிகம் வரை இதுதான் யதார்த்தம். இதற்குக் காரணம், இந்தியத் தொல்லியல் ஆய்வில் இருக்கும் மேட்டுக்குடி பார்வைதான். ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம்காட்டும் தொல்லியல் ஆர்வலர்கள், சோழ ராஜ்ஜியத்தில் குறுநில மன்னர்களாய்க் கோலோச்சிய கோப்பெருஞ்சிங்கன் போன்ற குறுநில மன்னர்களைப் பற்றியும் அவர்கள் ஆட்சி செய்த தொல்குடிகள் பற்றியும் அறிந்து கொள்ள அவ்வளவாய் ஆர்வம் காட்டுவதில்லை.
ராஜராஜ சோழனின் தாய் வானவன் மாதேவி மலைய மான்கள் என்ற தொல்குடியில் பிறந்தவர். கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் குலத்தில் பிறந்தவர். ராஜராஜனைப் பற்றியும் கண்டராதித்தனைப் பற்றியும் தெரிந்தவர்களுக்கு தொல்குடிகளான மலைய மான்கள் குலத்தையும் மழவராயர் குலத்தையும் பற்றி எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது.
இது குறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன், ''தொல்குடிகள்தான் அரசுகள் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தவர்கள். இந்தியத் தொல்லியல் துறையும் மாநிலத் தொல்லியல் துறையும் இதுவரை ஆகழாய்வு செய்திருக்கும் அரிக்கன்மேடு, கொற்கை, அழகன்குளம், பூம்புகார் உள்ளிட்ட அனைத்து இடங்களுமே சங்க காலத்தில் வர்த்தக மண்டலங்களாக இருந்தவை.
அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தலைநகரங்கள் போல் இருந்தவை. இவைதான் அரசின் கருவூலங்கள். ஆனால், ஒரு அரசின் தோற்றம், உருவாக்கம் என்பது தொல்குடிகளில் இருந்துதான் தொடங்கியது. இதை உணர்ந்துதான் இப்போது சீனா, எகிப்து, சுமேரியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் தொல்குடிகளைப் பற்றிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அங்கெல்லாம் இப்போது ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் அதிகளவில் நடக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏ.எல்.பாஷ்யம், ரோமிலா தாப்பர், செண்பகா லட்சுமி, விமலா பெக்லே போன்றவர்கள்தான் தொல்குடிகளின் பூர்விகத்தைத் தேடி ஊரகத் தொல்லியல் ஆய்வுகளை நடத்தியவர்கள். பாட்டாளி மக்களின் தொன்மை வரலாற்றை இந்தியாவில் பதிவுசெய்தவர்கள். ஆனால், தனிப்பட்ட ஆய்வாளர்கள் இத்தனை ஆர்வம் காட்டினாலும் மத்திய - மாநில தொல்லியல் துறைகள், ஊரகத் தொல்லியல் ஆய்வு குறித்து இன்னும் போதிய புரிதல் இல்லாமலே இருக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரை நகரப் பண்பாட்டுத் தாக்கம் இல்லாத சங்க காலத்து ஊர்கள் ஏராளம் இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் நாங்கள் அப்படியான 375 ஊர்களை அடையாளம் கண்டு ஆய்வுகளை நடத்தி இருக்கிறோம். இந்த ஊர்களில் இருந்து சங்க காலத்து ஆயுதங்கள், மக்கள் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், தமிழ் எழுத்துகள் உள்ளிட்டவற்றைக் கண்டெடுத்திருக்கிறோம்.
இங்கெல்லாம் நமது தொல்லியல் துறையினர் இன்னும் முழுமையாக ஆய்வுகளை மேற்கொண்டால் இந்தப் பகுதிகளில் வாழ்ந்த தொல்குடிகளின் வரலாற்றை முழுமையாக அறிய முடியும். இதையெல்லாம் இப்போது அங்கு வசிக்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் மூலம் சங்ககாலப் பெருமை கொண்ட ஊரில் நாமும் வாழ்கிறோம் என்ற உணர்வை அந்த மக்களுக்கு ஊட்ட முடியும். இதன் மூலம் தேசப்பற்றை வளர்ப்பதுடன் தொல்குடிகளின் பண்பாடு, கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும் முடியும்.
தமிழை வளர்த்தவர்கள் தொல்குடிகள்தான். புறநனூற்றில் வரும் சங்ககாலப் புலவர்கள் 400 பேரில் தொண்ணூறு சதவீதம் பேர் ஊரகப்பகுதிகளில்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட கிராமங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இதன் மூலம் சங்க காலத்தில் கிராமங்களிலும் வளமான கல்வியறிவு இருந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
இத்தனை சிறப்புகள் இருந்தும் ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் குறித்து நாம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். ஊரகத் தொல்லியல் ஆய்வுகள் குறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டுமே இப்போது தன்னார்வத்தில் அவ்வப்போது ஆய்வுகளை நடத்தி வருகிறது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் கா.ராஜன், பழநி அருகே பொருந்தல் என்ற கிராமத்தில் நடத்திய ஊரகத் தொல்லியல் ஆய்வில் கி.மு. 490-ம் ஆண்டைச் சேர்ந்த நெல்மணியைக் கண்டுபிடித்தார். இப்படி ஒரு சிலர் மட்டுமே தங்களது சுயமுயற்சியில் ஊரகத் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற ஆய்வுகள் ஊருக்கு ஊர் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், கீழடி, கொடுமணல் எனக் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் நிதி ஒதுக்கித் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படுகின்றன. அதுவும் தேவையான ஒன்றுதான் என்றாலும் அதற்கு நிகராக ஊரகத் தொல்லியல் ஆய்வுகளையும் ஊக்கப்படுத்த வேண்டிய நேரம் இது. இதற்காக ஒரு கிராமத்துக்கு 3 லட்ச ரூபாய் ஒதுக்கினாலே போதுமானது. இப்படிச் செய்வதன் மூலம் தொல்குடிகளைப் பற்றிய மேலும் பல வரலாற்று உண்மைகளை நாம் அறியமுடியும்.
ஏனென்றால் விவசாய உற்பத்தியில் தொடங்கி இரும்புத் தொழிற்சாலைகளைக் கண்டது வரை அனைத்தையும் நமக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் தொல்குடிகள்தான். அதுமாத்திரமல்ல... பண்டமாற்று வர்த்தகத்தையும் அதன் மூலம் அந்நியச் செலாவணி ஈட்டுவதையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படித்து வைத்திருந்தவர்கள் நம் தொல்குடிகள்.
நாகரிகத் தொட்டில்களாக விளங்கிய நம் தொல்குடிகளைப் பற்றி முழுமையான அகழாய்வுகள் நடத்தப்பட்டால்தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி என்று சொல்லப்படும் தமிழ்க் குடியின் வரலாறு முழுமை பெறும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT