Published : 22 Sep 2020 01:04 PM
Last Updated : 22 Sep 2020 01:04 PM

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கக் கூடாது; ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கிய திமுக எம்.பி.க்கள்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக முதல்வர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்.பி.க்கள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று (செப். 22) புதுடெல்லியில் நேரில் சந்தித்தனர். அப்போது மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப். 21) எழுதிய கடிதத்தை மோடியிடம் வழங்கினர்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"கர்நாடக மாநில முதல்வர் தங்களைச் சந்தித்தபோது, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மேகேதாட்டு அணை உள்ளிட்ட நீர்ப்பாசன மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி இருப்பது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

மேகேதாட்டு அணைத் திட்டம், 05.02.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையும், 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் முற்றிலும் மீறுவதாகும். மேலும், இது விவசாயிகளின் நலனுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

பிரதமர் மோடி: கோப்புப்படம்

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து உறுதியாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மேகேதாட்டு அணைத் திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என நிராகரித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தற்போது இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மேகேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கும் விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகேதாட்டு அணைத் திட்டம் காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதிகளாக உள்ள மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வருவதில், எப்போதுமே சரிசெய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மிக முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாகப் பாதிக்கும்.

எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான மேகேதாட்டு அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதல்வர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது எனச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு, திமுக சார்பாக தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு அக்கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x