Published : 22 Sep 2020 10:12 AM
Last Updated : 22 Sep 2020 10:12 AM
ஈரோடு மாவட்டத்தில் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட 25 சாய, சலவை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளிடமிருந்து சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, வைராபாளையம் குப்பைக் கிடங்கு, காடையாம்பட்டி சாய, சலவை தொழிற்சாலைகளில், தேசிய பசுமை தீர்ப்பாய குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்று நீர் மாசுபடுவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் காவிரி ஆற்றில் நீர் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும், நீரின் தரத்தை உயர்த்தும் விதமாகவும் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
காவிரி மாசு படுவதற்கான காரணம் குறித்து இக்குழுவானது ஆய்வு மேற்கொண்டு, அவ்வாறு மாசு ஏற்பட காரணமான ஆலைகள் மீது நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீடு வசூல் செய்யவும் உத்தரவிட்டது. மேலும் காவிரி ஆற்றின் நீரை தரம் உயர்த்த ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 25 சாய, சலவை மற்றும் தோல்பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.1.35 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை இணையும் இடம், வைராபாளையம் குப்பைக் கிடங்கு மற்றும் பவானி ஆற்றுப் பகுதியில் நீர் தரம் குறித்து சுற்றுச்சூழல் அலுவலர்கள் மூலம் நீர் மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காடையாம்பட்டி சாய, சலவை தொழிற்சாலையில், பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு முறையில் கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகள் சுத்திகரிக்கும் முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என்றார்.
ஆய்வின்போது ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில் விநாயகம், உதயகுமார், செல்வகுமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.காசிலிங்கம், பறக்கும்படை செயற்பொறியாளர் மணிவண்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT