Published : 22 Sep 2020 07:42 AM
Last Updated : 22 Sep 2020 07:42 AM
திருவள்ளூர் மற்றும் திருத்தணி பகுதிகளில் கரோனா தடுப்புநடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளுர் தேரடி, பஜார் வீதி மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கரோனா பாதிப்பில் இருந்து, தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பிறகு அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்குச் சென்று, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு, மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி, நோயில் இருந்து குணமடையச் செய்ய உரிய அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து, ஆய்வு மேற்கொண்டார். பிறகு அவர், சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் இதுவரை முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் பாதிப்பு வீதமும், இறப்பு வீதமும் படிப்படியாக குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்டஆட்சியர் மகேஸ்வரி, வருவாய் அலுவலர் முத்துசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, பொது சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர்கள் ஜவஹர்லால், பிரபாகரன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT