Published : 25 Sep 2015 03:42 PM
Last Updated : 25 Sep 2015 03:42 PM
விருதுநகர் அருகே பாசனத்துக்கு நீரின்றி விவசாயம் பொய்த்ததால், சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் பலர், ஊர் ஊராகச் சென்று வறண்ட கண்மாய்களில் கோரைக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து விற்று பிழைப்பு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது குல்லூர்சந்தை கிராமம். 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மழை நீரைத் தேக்கிவைத்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் குல்லூர் சந்தை அணை கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கடந்த 30.12.1986 அன்று திறந்துவைத்தார். இதன்மூலம் குல்லூர்சந்தை, சூலக்கரை, மெட்டுக்குண்டு, சென்னல்குடி, செட்டியபட்டி, மருளூத்து, கல்லூமார்பட்டி கிராமப்பகுதிகளில் 2,891 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
ஆனால், விருதுநகர் வழியாக குல்லூர்சந்தை அணையில் சேரும் கௌசிகா நதி தற்போது கழிவுநீர் ஓடையாக மாறியுள்ளது. போதிய மழையும் இல்லாததால் குல்லூர்சந்தை அணைக்கு வரும் வரத்து வாய்க்கால்களும், அணையில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால்களும் மண் மேடாகி விட்டன.
அவ்வப்போது, பெய்யும் மழையால் அணையில் தேங்கும் நீரில் மீ்ன்கள் வளர்க்கப்படுகின்றன. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படாததால், குல்லூர்சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் பொய்த்து விட்டது.
தொடர் வறட்சியால் சில ஆண்டு களாக விவசாயம் முற்றிலும் பொய்த்ததால் குல்லூர்சந்தை யைச் சேர்ந்த பெண்கள் 30-40 பேர் சேர்ந்து ஊர்ஊராகச் சென்று வறண்ட கண்மாய்களில் காய்ந்து கிடக்கும் கோரைக்கிழங்குகளை பறித்து எடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது விருதுநகர்- திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள எல்கைபட்டி கண்மாயில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கோரைக்கிழங்கு தோண்டி எடுத்து வருகின்றனர்.
கோரைக்கிழங்கு விஷத் தன்மை இல்லாதது. மேலும், மணம் உடையது. கோரைக்கிழங்குகள் காயவைக்கப்பட்டு அரைத்து மாவாக்கப்பட்டு பல்வேறு மாவுகளுடன் கலந்து விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, குல்லூர்சந்தை யைச் சேர்ந்த அழகு (47) கூறு கையில், எங்களுக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. எம்ஜிஆர் அணை கட்டித் திறந்தபோது குல்லூர் சந்தையை நெல்லூர் சந்தையாக மாற்றுவேன் என்று கூறினார். அதேபோன்று 5-6 ஆண்டுகளுக்கு நன்றாக பாசனம் இருந்தது. விவசாயமும் நன்றாக இருந்தது. ஆனால், மழை இல்லாததால் அணை வறண்டுவிட்டது. வாய்க் கால்களும் மேவிக்கிடக்கின்றன. பிழைப்புக்கு வேறு வழியில்லா ததால், ஊர்ஊராகச் சென்று வறண்ட கண்மாய்களில் காய்ந்துகிடக்கும் கோரைப் புல்லை தோண்டி எடுத்து வேர் பகுதியில் சிறிதுசிறிதாக இருக்கும் கிழங்குகளை சேகரித்து விற்று பிழைப்பு நடத்துகிறோம் என்றார்.
கணபதி என்ற பெண் கூறுகை யில், ஊரில் பிழைப்புக்கு வேறு வழியில்லை. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை கோரைக்கிழங்குகளைத் தோண்டி எடுப்போம். தீ மூட்டத்தில் அதை மேலோட்டமாகக் காட்டும்போது வேர்கள் கருகிவிடும். பின்னர் கிழங்கை மட்டும் தனியாகப் பிரித்து சேகரித்து விருதுநகர் மற்றும் குல்லூர்சந்தையில் உள்ள மொத்த கமிஷன் கடையில் கொடுப்போம். கிலோவுக்கு ரூ.10 முதல் 13 வரை தருவர். ஒரு நாளைக்கு ரூ.150 வரை கிடைக்கும். குல்லூர்சந்தையிலிருந்து விருதுநகர் வந்து, பின்னர் விருதுநகரிலிருந்து எல்கைபட்டி வரவும் அதே போன்று திரும்பிச் செல்லவும் பஸ் டிக்கெட் ஒரு நபருக்கு ரூ.30 செலவாகும். மீதி பணத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம் என்றார்.
முத்துமாரி என்பவர் கூறியபோது, குல்லூர்சந்தை அணையையும், அதற்கு வரும் வரத்து வாய்க்கால்களையும், பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். கௌசிகா ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுப்பதோடு, அணையில் மீன் வளர்ப்பை நிறுத்திவிட்டு, அவ் வப்போது பெய்யும் மழை நீரை தேக்கிவைத்து பாசனத்துக்கு திறந்துவிட அரசு முயற்சி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எங்களைப் போன்ற விவசாயிகள் பிழைக்க முடியும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT