Published : 21 Sep 2020 06:50 PM
Last Updated : 21 Sep 2020 06:50 PM
கோவையில் கரோனா பரிசோதனைகளைத் துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக, 20 நடமாடும் கரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கோவை ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்குப் பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்த வாகனத்தில் பரிசோதனையாளர் செவிலியர், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் பணி மேற்கொள்வார்கள். மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவது, சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்வது ஆகிய பணிகள் 108 அவசரகால ஊர்திகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 118 புதிய ஊர்திகளின் சேவையைக் கடந்த 31.08.2020 அன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 அவசரகால ஊர்திகள் 09.09.2020 முதல் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே 41 ஊர்திகள் கரோனா சிகிச்சைக்காக இயங்கிவரும் நிலையில், புதிய ஊர்திகளையும் சேர்த்து மொத்தம் 53 அவசரகால ஊர்திகள் உள்ளன. 2 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் என அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனையாக இந்த வாகனங்கள் உள்ளன.
கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கோவை மாவட்டத்தில் உள்ள மாநகரப் பகுதிகள் 5 மண்டலங்களாகவும், ஊரகப் பகுதிகள் 5 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 5 அலுவலர்களும், துணை ஆட்சியர் நிலையில் 5 அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை 3,27,516 பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தற்போது வரை 25,914 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 21,168 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு நோய் தொடர்பிலிருந்த 382 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் 9,386 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 782 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 730 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 52 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.”
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT