Published : 21 Sep 2020 05:19 PM
Last Updated : 21 Sep 2020 05:19 PM

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாரிமுனையில் மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சென்னை

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதா அறிமுகத்தின்போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. விவசாயிகளைப் பணியாளர்களாக மாற்றி கார்ப்பரேட்டுகள் கையில் இந்திய விவசாயத்தை ஒப்படைக்கும் செயல், சந்தை முறை முற்றிலும் அழியும், விவசாயிகள் கார்ப்பரேட்டுகள் கையில் சிக்கி அழியும் நிலை ஏற்படும், சிறுகுறு விவசாயிகள் மட்டுமல்ல பெரும் விவசாயிகளும் பாதிக்கப்படுவர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இதைக் கண்டித்து செப். 25-ல் நாடு தழுவிய அளவில் போராட்டம், மறியல் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. இதேபோன்று திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் செப்.28-ல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளன.

“புதிய வேளாண் சட்டம் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து; பதுக்குதல் தாராளமயமாக்கப்படுகிறது. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் - ஏழை விவசாயி என்ற சமன்பாடற்ற, ஓர் ஒப்பந்த வணிகம் திணிக்கப்படுகிறது.

விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும் கேடு ஏற்படுத்தப்படுகிறது. விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தினைத் திணித்து, மாநிலத்திற்குள்ளான வணிகம் மற்றும் வர்த்தகமும் பறிக்கப்படுகின்றன.

மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள; விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் - கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானது” என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை பாரிமுனையிலிருந்து கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் பாரிமுனையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திடீரென ஆர்பாட்டம் நடத்தியவர்கள் கோட்டையை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனால் தொண்டர்கள், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலைத்தடுப்புகளை வைத்து போலீஸார் தடுத்தனர். இதனால் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x