Published : 21 Sep 2020 04:46 PM
Last Updated : 21 Sep 2020 04:46 PM

நாகை மா.மீனாட்சிசுந்தரத்தின் உடல் நல்லடக்கம்

மா.மீனாட்சிசுந்தரம்: கோப்புப்படம்

நாகப்பட்டினம்

3 முறை எம்எல்ஏவாக இருந்த திமுக நாகை மாவட்ட அவைத் தலைவர் மா.மீனாட்சிசுந்தரத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதியில் 3 முறை திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் மா. மீனாட்சிசுந்தரம் (84). உடல்நலக் குறைவு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (செப். 21) காலை காலமானார்.

கடந்த 15-ம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், தந்தை பெரியார் விருதை வழங்கினார். அந்த விருதினை மா.மீனாட்சிசுந்தரத்தின் மகன் மா.மீ.புகழேந்தி பெற்றுக்கொண்டார்.

தந்தை பெரியார் விருது பெற்ற மா.மீனாட்சிசுந்தரம் கடந்த 6-3-1937 ஆம் ஆண்டு வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் மாசிலாமணி-செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 1954-ம் ஆண்டு தனது 17-வது வயதில் திமுகவில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டு திமுகவின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

1971-ம் ஆண்டு வேதாரண்யம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977-ல் இரண்டாவது முறையாகவும், 1984 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் வேதாரண்யம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வேதாரண்யம் நகரமன்றத் தலைவராக ஐந்து ஆண்டு காலம் பணியாற்றினார்.

கடந்த 1976-ம் ஆண்டு மிசாவில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். வேதாரண்யம் பகுதியில் இவர் தலைமையில் அதிக அளவில் சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பி வந்தார். நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராகப் பணியாற்றி வந்த மா.மீனாட்சிசுந்தரம் பெரியார் சிலையை வேதாரண்யத்தில் நிறுவினார். மேலும், பெரியார் நூலகத்தையும் திறந்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அறிவித்த சமத்துவப் பொங்கல் விழாவை தன் கடைசிக் காலம் வரை நடத்தி வந்தார். அவரது மறைவால் திமுகவினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

மா.மீனாட்சிசுந்தரத்தின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த மீனாட்சிசுந்தரத்திற்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், அன்பரசன், புகழேந்தி என்ற 2 மகன்களும் உள்ளனர். அன்பரசன் வேதாரண்யம் நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும், வழக்கறிஞராகவும் உள்ளார். புகழேந்தி வேதாரண்யம் நகர திமுக செயலாளராக உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x