Published : 21 Sep 2020 04:29 PM
Last Updated : 21 Sep 2020 04:29 PM
அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கான அதிவேக இணையதள வசதியை அரசு இலவசமாக வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. அதேபோல கல்லூரி படிக்கும் மாணவர்களின் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என யுஜிசி தெரிவித்ததை அடுத்து, செப்டம்பர் மாதத்துக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடக்க ஆரம்பித்துள்ளன. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடர்ந்து வழக்கம் போல் 3 மணி நேரம் ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுவதால், இதில் கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் மாணவர்கள் அனைவருக்கும் போதிய இணையதள வசதி கிடையாது.
எனவே அரசு உரிய முறையில் மாணவர்களுக்கு அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதிய இணைய வசதிகளுடன் தேர்வுகள் எழுத அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கான அதிவேக இணையதள வசதியை அரசு இலவசமாக வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT