Published : 21 Sep 2020 02:00 PM
Last Updated : 21 Sep 2020 02:00 PM
விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் இன்று திருவோடு ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம்- வேளாண் சேவைகள் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா" ஆகிய 3 மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஜூன் 5-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்த 3 மசோதாக்களுக்கும் நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
இதனிடையே, அண்மையில் 3 மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று (செப். 20) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதாவைத் தவிர எஞ்சிய 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
இந்தநிலையில், விவசாய மசோதா மற்றும் விவசாயச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் இன்று (செப். 21) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கையில் திருவோடு ஏந்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, பூ.விசுவநாதன் கூறுகையில், "விவசாயச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாய மசோதாக்களைக் கொண்டு வந்த மத்திய அரசையும், விவசாய மசோதாக்கள் சட்டமாக நிறைவேற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசையும் கண்டிக்கிறோம். விவசாயச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லையெனில் தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT