Published : 21 Sep 2020 12:16 PM
Last Updated : 21 Sep 2020 12:16 PM
பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து வரும் 27-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 21) வெளியிட்ட அறிக்கை:
"பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் உள்ள பெரியாறு பங்கீட்டு நீர் மற்றும் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பும் சேர்த்து 6,000 மி.க.அடி தண்ணீர் இருந்தால் பெரியாறு பாசனப் பகுதியில், ஒருபோக பாசன நிலங்களுக்கு, திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் சேர்த்து பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.
இதன்படி, பெரியாறு வைகைப் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கக்கோரி விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து வரும் 27-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT