Published : 21 Sep 2020 08:13 AM
Last Updated : 21 Sep 2020 08:13 AM

நீர்நிலை மேலாண்மை விதிகளைப் பின்பற்றாமல் கோவை குளங்களில் அவசரகதியில் சீரமைப்புப் பணி: ‘இந்து தமிழ்' செய்தி அடிப்படையில் மக்களவையில் பேசிய பொள்ளாச்சி திமுக எம்.பி.

கோவை

கோவையில் உள்ள குளங்கள் சீரமைப்புப் பணியில் நீர்நிலை மேலாண்மை விதிகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி திமுக எம்.பி. சண்முகசுந்தரம், மக்களவையில் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

நொய்யலாற்றை ரூ.230 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ், கோவையில் 18 அணைக்கட்டுகள், 22 குளங்களைத் தூர்வாரி, சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோவை ஆச்சான்குளம், பள்ளபாளையம் குளம், வெள்ளலூர் குளம் உள்ளிட்ட குளங்களின் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, கரையோரமுள்ள நாணல் புற்கள், புதர்கள் அகற்றப்படுவதால் கரையோரம் உள்ள சிறிய பூச்சிகள், புழுக்களை உணவாக உட்கொள்ளும் பறவைகள் பாதிக்கப்படுவதுடன், குளங்களின் பல்லுயிர்ச்சூழலும் பாதிக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி 'இந்து தமிழ்' நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், அந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு மக்களவையில் பொள்ளாச்சி திமுக எம்.பி. சண்முகசுந்தரம் நேற்றுமுன்தினம் பேசியுள்ளார்.

அப்போது அவர், "கோவையில் முக்கியமான 22 குளங்களின் கரைகளில் கான்கிரீட்டால் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது இயற்கைக்கும், உயிர்ச் சூழலுக்கும் எதிரானது. பாரம்பரியமான ஏரி மற்றும் குளக்கரைகளை இயற்கையான முறையில் பாதுகாக்கும் பணிகள் காலம்காலமாக நடந்து வந்தநிலையில், அதற்கு முற்றிலும் மாறாக கான்கீரிட் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

நொய்யல் நதியை குப்பைகள், சாக்கடைக் கழிவுகள், ஆலைக் கழிவுகளிலிருந்து பாதுகாக்க அறிவியல்பூர்வமான பணிகளில் அரசு ஈடுபட வேண்டும். நதி உருவாகும் இடத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, அவசரகதியில் நிதியை செலவிட வேண்டுமென்ற நோக்கில், நீர்நிலைகளை பாழாக்கும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இயற்கைக்கும், நீர்நிலை மேலாண்மை விதிகளுக்கும் உட்பட்டு குளங்களில் பணி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்திப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x