Published : 20 Sep 2020 06:24 PM
Last Updated : 20 Sep 2020 06:24 PM
அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு, பேராசிரியர் பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாளை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது, கோரிக்கை நிறைவேறாவிட்டால் நீதிமன்றத்தை நாடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதமே அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு, “தற்போதைய 4 வளாக கல்லூரிகளும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தங்கள் தரத்தை சிறப்பாக பராமரிப்பதால்தான் உலக அளவில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அங்கீகாரம் உள்ளது.
ஆனால், இதன் பெயரை மாற்ற முயற்சிப்பது தவறானது. அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் மற்றும் ஆய்வுகளுக்காகத்தான் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குகிறது. இப்போது பெயர் மாறினால் சிறப்பு அந்தஸ்து பெறுவதே சிக்கலாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் இதுவரை வெளியான ஆய்வுகளை அளவுகோலாக வைத்துதான் சிறந்த ஆய்வு மையத்துக்கான ‘ஹைஇன்டக்ஸ்’ மதிப்பெண் வழங்கப்படும். பெயர் மாறினால் அந்த மதிப்பெண் பூஜ்ஜியமாகிவிடும். தொடர் உழைப்பில் 41 ஆண்டுகள் உருவாக்கிய தரத்தை 5 ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியாது. இதேபோல், பழைய மாணவர்கள் நிதியுதவி, தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மற்றும் பட்டமளிப்பு அங்கீகாரம் என அனைத்து நிர்வாக பணிகளும் கேள்வியாகும்.
தற்போதுள்ள சிண்டிகேட் முறை மாற்றப்பட்டு நிர்வாகக்குழு அமைக்கப்படுகிறது. இதையடுத்து துணைவேந்தர் பதவி இயக்குநராக மாறக்கூடும். மேலும், இடஒதுக்கீடுக்கான மதிப்பெண் வரையறை மற்றும் கல்விக் கட்டணமும் உயரும் என்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம்தான் தமிழக மாணவர்கள் பொறியியல் கனவுக்கு உயிரூட்டுகிறது. எனவே, கல்வியாளர்கள் கருத்துகளை கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
42 வருட கால சிறப்பு மிக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால், மாணவர்களின் சான்றிதழ்களில் பாதிப்பு ஏற்படும். பல்வேறு வெளிநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்விக்குறியாகும்” .
என பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக 2-ஆக பிரிக்கும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, தற்போதைய அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றவும், புதிதாக பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு, பேராசிரியர் பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற, பொதுக்குழுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
42 வருட கால வரலாற்றுச் சிறப்பம்சங்கள் இழப்பு ஏற்படுத்தும் முடிவு இது என வேதனை தெரிவித்துள்ள பேராசிரியர் கூட்டமைப்பு, தற்போதைய அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து இதே பெயரில் செயல்படவும், புதிய பல்கலைக்கழகத்துக்கு வேறு பெயரை வைக்கவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஆசிரியர்கள் உட்பட, அனைத்துப் பணியாளர்களும் நாளை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிய முடிவு செய்யப்பட்டது. அமைதியான முறையில் தொடர் போராட்டங்கள் நடத்தவும், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (AUTA ) முடிவு செய்துள்ளது.
கோரிக்கையை ஏற்காவிட்டால், நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT