Published : 20 Sep 2020 12:57 PM
Last Updated : 20 Sep 2020 12:57 PM
தஞ்சாவூர் அருகே சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட் டுள்ள ஆதிமாரியம்மன் கோயிலை இடிக்கும் பணியைப் பொதுப்பணித் துறையினர் நேற்று தொடங்கினர். இதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தஞ்சாவூர் அருகே புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் சமுத்திரம் ஏரி மற்றும் கரையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் புளியந் தோப்பு, அருண்மொழிப்பேட்டை கிராமங்களில் சமுத்திரம் ஏரி மற்றும் கரையில் 91 ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவற்றை இடிக்கும் பணியைப் பொதுப்பணித் துறையினர் கடந்த 2017-ம் ஆண்டில் தொடங்கி, இதுவரை 70 ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். மீதி 21 ஆக்கிர மிப்புகள் உள்ளன.
இந்நிலையில், புளியந்தோப்பு கிராமத்தில் மிக உயரமான சிவலிங்க வடிவில் ராஜகோபுரத் துடன் கட்டப்பட்டுள்ள ஆதிமாரியம்மன் கோயிலும், சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் நேற்று அந்தக் கோயிலை இடிக்கத் தொடங்கினர். இதையொட்டி, அந்தப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறியதாவது:
சமுத்திரம் ஏரியில் 14,200 சதுர அடி பரப்பளவில் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இதை அகற்றும் பணி நடைபெற்று வந்தபோது, இந்தக் கோயிலைச் சேர்ந்த பத்மாவதி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 10 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த ஆகஸ்ட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆக்கிர மிப்புகளை அகற்றி வருகிறோம் என்றனர்.
கோயிலின் சில பகுதிகள் இடிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தகவலறிந்த இந்து முன்னணி கோட்டச் செயலாளர் பி.மோகனசுந்தரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஈசானசிவம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் அங்கு திரண்டு, கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கோயிலை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கோட்டாட்சியர் எம்.வேலுமணி, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீதாராமன், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மோகனசுந்தரம் தெரிவித்தது:
இங்கு 45 ஆண்டுகளாக உள்ள இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். எனவே, இக்கோயிலை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறோம். இங்கு ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் வழங்கிய 10 வாரங்கள் அவகாசம் நிறை வடைய இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்குள் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் அணுகி மேல்முறையீடு செய்கிறோம். அதுவரை இடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
தற்கொலை மிரட்டல்
இதற்கிடையே, இந்து முன்னணி மாவட்டப் பொதுச் செயலாளர் ந.முருகன், அந்தக் கோயிலின் முகப்பில் ராஜகோபுர வடிவில் உள்ள சிவலிங்கத்திலுள்ள பீடத்தின் மீது ஏறி, கோயிலை இடிக்கக் கூடாது என தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சமாதானப்படுத்தி கீழே இறங்கச் செய்தனர்.
தொடர்ந்து, மாலையில் வெளிச்சமின்மை காரணமாக பணியை நிறுத்திய அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நாளை(இன்று) தொடர்ந்து நடைபெறும் எனக் கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து, இந்து முன்னணியினரும் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT