Published : 20 Sep 2020 12:51 PM
Last Updated : 20 Sep 2020 12:51 PM

முடிவுக்கு வருகிறது ஈரோடு சாயக்கழிவுநீர் பிரச்சினை; பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி: 3 மாதத்தில் பணிகள் தொடங்க நடவடிக்கை

ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் ஓடும் சாயக்கழிவு நீர் (கோப்பு படம்)

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ.750 கோடியில் அமையவுள்ள நவீன பொது சுத்திகரிப்பு நிலையம், சாயக்கழிவு நீரால் ஏற்படும் நீண்டகால பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வினைத் தரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

ஈரோட்டில் 460 சாய, சலவை ஆலைகளும், 29 தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நீர்நிலைகளை மாசுபடுத்துவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு, ஆலைக்கு சீல் வைப்பு என அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொது சுத்திகரிப்பு நிலையம்

இப்பிரச்சினைக்குத் நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொழிற்சாலைகள் தரப்பினர் இணைந்து, ரூ.750 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் உருவானது. இதற்கான நிதியில் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் 25 சதவீதம் பங்களிப்பு செய்ய திட்டமிடப்பட்டது.

முதற்கட்டமாக, ‘அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ்’ என்ற சங்கம் சார்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைய, சர்க்கார் பெரிய அக்ரஹாரம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 27 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி, கங்காபுரம் ஒரு பிரிவு, ராசாம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு ஒரு பிரிவு, சூரியம்பாளையம், சித்தோடு பகுதி ஒரு பிரிவு, பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதி ஒரு பிரிவு, வைராபாளையம், கருங்கல்பாளையம் ஒரு பிரிவு என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பொதுசுத்திகரிப்பு நிலையம் ஐந்து பிரிவுகளாக செயல்படவுள்ளது.

இது தொடர்பாக ‘அசோசியேசன் ஆப் ஆல் டெக்ஸ்டைல்ஸ் பிராசசர்ஸ்’ சங்கத்தின் இணைச்செயலாளர் கே.வீரகுமார் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாய, சலவை ஆலைகள் ஒரு லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க 25 பைசா செலவிடும் எனில், பொது சுத்திகரிப்பு நிலையத்தில் 10 பைசா மட்டுமே செலவாகும். எனவே, அனைத்து தொழிற்சாலையினரும் கழிவு நீரை திறம்பட சுத்திகரிக்க முன்வருவார்கள். அரசைப் பொறுத்தவரையில் ஒரே இடத்தில் நீர் சுத்திகரிப்பு நடைபெறுவதால், கண்காணிப்பு எளிதாகும்.

எங்களுக்கு மாசுகட்டுப்பாடு வாரியம், வருவாய்துறை, மின்வாரியம் என துறைவாரியான அதிகாரிகளின் ஆய்வுகளால் ஏற்படும் நெருக்கடிகள் குறையும். ஆன்லைன் மீட்டர் மூலம் எவ்வளவு கழிவுநீரை வெளியிடுகிறோமோ அவ்வளவிற்கு பணம், சுத்திகரிப்பு நிலையத்திற்கு செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்படும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது ஒரு நாளைக்கு 4 கோடி லிட்டர் நீர் பயன்பாடு உள்ளது. நேரடியாக, மறைமுகமாக என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொது சுத்திகரிப்பு நிலையம் அமையும் போது, எவ்வளவு நீர் எடுக்கின்றனர் என்பதை சரியாக கண்காணிக்க முடியும். 90 சதவீதம் நீரை திரும்பப்பெற்று மீண்டும் தொழிற்சாலைக்கு பயன்படுத்த கொடுக்கப்படுவதால், நிலத்தடி நீரின் உபயோகம் வெகுவாகக் குறையும், என்றார்.

பொதுசுத்திகரிப்பு நிலையம் விரைவாக அமைய வேண்டும் என்பதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் தேக்கமடைந்த நிலையில், முதல்கட்டமாக ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் விருதுநகர் மாவட்டத்திலும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மத்திய அரசு தற்போது ஒப்புதல் கொடுத்துள்ளது. இதையடுத்து, ‘அடுத்த மூன்று மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும்’ என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

நோய் பாதிப்பு குறையும்

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுச்சூழல்பாதிப்பு, நோய் பாதிப்பு பிரச்சினை பிரதான பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் விரைவாக அமைவதே தீர்வாக அமையும். இப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

சிறிய ஆலைகளுக்கு தீர்வு வருமா?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் சாய ஆலைகள் குடிசைத்தொழில் போல் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் வெளியேற்றும் சாயக்கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து வருகிறது.

சிறிய ஆலைகளின் கழிவுநீரைச் சுத்திகரிக்க, இப்பகுதியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மூன்று சுத்திகரிப்பு பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன. 
இது தவிர, பவானி வட்டாரத்தில் காடையாம்பட்டி, சேர்வராயம்பாளையம்,செங்காடு பகுதியில் உள்ள ஆலைகளுக்காக 3 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

சென்னிமலை பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் இணைந்து பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்தால், கழிவுநீர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x