Published : 20 Sep 2020 12:51 PM
Last Updated : 20 Sep 2020 12:51 PM

மழை உள்ளிட்ட காரணங்களால் சேலத்தில் தீக்குச்சி உற்பத்தி 30 % சரிவு: மானியம் வழங்க வலியுறுத்தல்

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலையில் தீக்குச்சிகளை வெயிலில் உலர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலத்தில் தீக்குச்சி உற்பத்தி 30 சதவீதம் சரிந்துள்ளது. இத்தொழிலை காக்க மானிய சலுகை வழங்க வேண்டும் என இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனிதர்களின் அன்றாட தேவைகளில் முக்கியமானதாக தீப்பெட்டி இருந்து வருகிறது. இத்தொழிலை நம்பி பல தொழிலாளர்கள் உள்ளனர். இத்தொழில் கரோனா கால ஊரடங்கினாலும், நடைமுறை சிக்கல்கள் அதிகரித்து வருவதாலும் பெரும் பிரச்சினையில் சிக்கி யுள்ளது. இத்தொழிலைப் பாதுகாக்க அரசு மானிய சலுகை களை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகம் வளர்ப்பதில்லை

இதுதொடர்பாக சேலத்தில் தீக்குச்சி உற்பத்தியில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்கள் சிலர் கூறியதாவது:

தீப்பெட்டி உற்பத்தித் தொழிலுக்கு அடிப்படையான தீக்குச்சிகள், பீநாறி மரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மரங்கள் வேறெந்த தேவைக்கும் பயன்படாதவை. எனவே, இவற்றை விவசாயிகள் அதிகமாக வளர்ப்பதில்லை என்பதால், மரங்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. அவற்றையும் வாங்கி வந்தால், இரு வாரங்களுக்குள் அவற்றை தீக்குச்சிகளாக மாற்றிவிட வேண்டும். இல்லாவிடில் அவை பயனற்றதாகிவிடும்.

கரோனா கால ஊரடங்குகளால் விற்பனையில் பாதிப்பு, போக்குவரத்து பாதிப்பு ஆகியவற்றால், தீப்பெட்டி உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டதால், தீக்குச்சிகளின் தேவை யும் வெகுவாக குறைந்துவிட்டன. இந்நிலையில், தீக்குச்சி உற்பத்திக்காக வாங்கிய மரங்கள் ஏராளமாக வீணாகிவிட்டன.

மழையால் பாதிப்பு

தற்போது மழைக்காலம் என்பதால், தீக்குச்சிகளை காய வைப்பதிலும் பிரச்சினை நிலவுகிறது. இதனால், தீக்குச்சி உற்பத்தி 30 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், வருவாய் இல்லாத தொழிலாக இது மாறி வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரூபாய்க்கு கிடைத்த கடலை மிட்டாயின் விலை கூட, தற்போது ரூ.5 ஆக உயர்ந்துவிட்டது. ஆனால், 16 வகையான மூலப்பொருள்களைக் கொண்டு, பல நூறு தொழிலாளர்களின் உழைப்பில் தயாராகும் தீப்பெட்டியின் விலை இன்றைக்கும் ஒரு ரூபாய் விலையில் கிடைக்கிறது.

சார்பு தொழிலும் பாதிப்பு

பாரம்பரியமாக தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்ட வந்த ஒரு சிலர் மட்டுமே, தொழிலைக் கைவிட முடியாத நிலையில் இயந்திரங்கள் உள்ளிட்ட தளவாடங்களை வீணாக வைத்திருக்க முடியாமலும், சொற்ப லாபத்தை எதிர்பார்த்து தீக்குச்சி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம்.

இதேபோல, தீப்பெட்டிக்கான அட்டை உற்பத்தி, ரசாயன உற்பத்தி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளோரின் நிலையும் பரிதாபமாகவே உள்ளது.

இத்தொழிலுக்கான நடைமுறை களை எளிதாக்குவதுடன், மானிய சலுகைகளை அரசு வழங்கினால் மட்டுமே, இத்தொழில் அணையா விளக்காக நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x