Published : 20 Sep 2020 11:37 AM
Last Updated : 20 Sep 2020 11:37 AM
கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்களை உள்ளடக்கிய கோவை வனக் கோட்டம் 711.80 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. இதில், சம தளமாக உள்ள 53 சதவீத நிலப்பரப்பை மட்டுமே யானைகள் வாழிடத்துக்காக பயன்படுத்துகின்றன.
வளர்ந்த யானைக்கு ஒரு நாளைக்கு 200 கிலோ முதல் 250 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணீரும் தேவை என்பதால் அவை பல கி.மீ நடந்துகொண்டே இருக் கும். இங்கு வரும் யானைகளில் பெரும் பாலானவை நீலகிரி மலைப் பகுதி, கேரளாவின் மன்னார்காடு, பாலக்காடு, பசுமைப் பள்ளத்தாக்கு பகுதிகளை உள்ளடக்கிய நிலம்பூர் பகுதியில் இருந்துவருகின்றன.
கடைசியாக நடைபெற்ற 2017 யானைகள் கணக்கெடுப்பின்படி கோவை வனக் கோட்டத்தில் 97 யானைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை வனக் கோட்டத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 19 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகளின் உயிரிழப்பை தடுக்க வனத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஐ.அன்வர் தீனிடம் கேட்டோம்.
அவர் கூறும்போது, “சிறுமுகை வனச் சரகத்துக்குட்பட்ட பெத்திக்குட்டை பகுதியில் மட்டும் 8 யானைகள் உயிரிழந் தன. இப்பகுதி ஒருபுறம் பட்டா நிலங் களாலும், மறுபுறம் பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்புப் பகுதியாலும் சூழப் பட்டுள்ளது. முட்புதர் காடுகளைக் கொண்டது என்பதால், அங்கு போதிய உணவு கிடைக்காத சூழலில் நீர்த் தேக்கத்தை கடந்து மறுபுறம் உள்ள அடர் வனப் பகுதியை யானைகள் அடைய வேண்டும். ஆனால், நன்றாக நீந்தும் திறன் இருந்தும், சில யானைகள் நீர்த் தேக்கத்தை கடந்து செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டன. அவற்றில் 8 யானைகள் உயிரிழந்துள்ளன.
இதில், 2 யானைகளின் கல்லீரல், சிறுநீரக பகுதியில் நஞ்சு (Chronic poisoning) படிந்துள்ளது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால், அவற்றின் வயிற்றில் நஞ்சு இல்லை. எனவே, ஒரே நேரத்தில் மொத்த நஞ்சும் சேரவில்லை. எங்கோ அதிகமாக செயற்கை பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்ட பயிர் களை தொடர்ந்து சில ஆண்டுகளாக உட்கொண்டதன் விளைவால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உணவில் விஷமா?
இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துடன் பேசியதில், கோவையில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் யானையை பாதிக்கும் அளவில் இல்லை என்று தெரி வித்தனர். இருப்பினும், இங்கு விவசாயி கள் எந்தெந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகிறார்கள், மாற்று பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விரிவான ஆய்வு செய்யுமாறு தெரிவித்துள்ளோம். யானைகள் எந்தெந்த காலங்களில் பயிர் களை சாப்பிடும் என தெரிந்துள்ளதால், பயிர் சுழற்சி முறையை மாற்றுவதால் பயன் கிடைக்குமா என்பதையும், வனப் பகுதியில் காணப்படும் தீவனப் புற் களை கண்டறிந்து அவற்றை விருத்தி செய்யும் தொழில் நுட்பத்தை கண்டறிய வும் முயற்சிகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
ஆண் யானைகள் கணக்கெடுப்பு
பெரும்பாலும் ஆண் யானைகள்தான் வேளாண் பயிர்களுக்கு சேதம் விளைவிக் கின்றன. அவை பயிர்கள் விளையும் இடங் களைக் கண்டறிந்து, அங்கு சென்று வரும் வழியை தெரிந்து கொள்கின்றன. கர்ப்ப மாக உள்ள யானைகளாலும், குட்டியுடன் உள்ள பெண் யானைகளாலும் நீண்ட தூரம் நடக்க முடியாது. எனவே, அது போன்ற யானை களையும், பயிர்களை உண்பதற்கு அழைத்துவந்து மீண்டும் வனத்துக்குள் ஆண் யானைகள் அழைத்து செல்கின்றன. ஆனால், பெரும்பாலான யானைகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவ தில்லை. பயிர்களை சுவைத்துப் பழகிய யானைகள் மட்டுமே தொடர்ந்து அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் அதை செய்து கொண்டே இருக்கின்றன.
யானைகளின் குணம், போக்கு யானை-மனித மோதலுக்கு முக்கிய காரண மாகிறது. அவற்றின் இயல்பை கண்டறிந்தால் வனப்பணியாளர் களால் அந்த யானைகளை எளிதாக கையாள இயலும். எனவே, கோவை வனக் கோட்டத்தில் உள்ள ஆண் யானைகளை மட்டும் கேமராக்களை பொருத்தி கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. கணக்கெடுப்பின்போது ஒவ்வோர் ஆண் யானைக்கும் ஓர் அடையாளக் குறியீடு வழங்க உள்ளோம்.
உயிரிழப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
இதுதவிர, ஜீரண பாதை கோளாறு காரணமாக 4 யானைகளும், மூளை யில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இரண்டு யானை களும், யானைகளுக்கு இடையேயான மோதலில் குத்துபட்டு 5 யானைகளும், கருத்தரித்தலில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக ஒரு யானையும், துப்பாக்கி யால் சுடப்பட்டு ஒரு பெண் யானையும், வயது மூப்பு காரணமாக ஒரு யானையும் இறந்துள்ளன. 3 யானைகளின் உடல் முழு வதும் சிதைந்த நிலையில் கிடைத்தது.
எனவே, அவற்றை உடற்கூராய்வு செய்து காரணத்தை கண்டறிய முடிய வில்லை. நிலம்பூர், கோவை ஆகிய யானைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 600 யானைகளும், நீலகிரி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் யானைகளும் உள்ளன. இதில், இனப்பெருக்க வயதை எட்டிய 25 முதல் 50 வயதுடைய யானைகளில் உயிரிழப்பு அதிகம் இல்லை. அவற்றின் எண்ணிக்கை இயல்பாக உள்ளது. யானைகளின் உயிரிழப்பை 2 வகையாக பிரிக்க லாம். ஒன்று இயற்கையான உயிரிழப்பு, மற்றொன்று புறக் காரணிகளாலான உயிரிழப்பு. யானைகளின் மொத்த எண்ணிக்கையில் ஆண்டுக்கு 3 சதவீத உயிரிழப்பு என்பது இயற்கையானது தான். எனவே, கோவை வனக் கோட்டத்தில் கவலைகொள்ளும் நிலையில் யானைகளின் உயிரிழப்பு இல்லை. இருப்பினும், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, துப்பாக்கிச் சூடு, அவுட்டுக் காயால் வாய் சிதைவு போன்ற புறக் காரணிகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
யானை-மனித மோதல் அதிகம் ஏன்? உதகை அரசு கலைக்கல்லூரி வனவிலங்கு உயிரியல் பேராசிரியர் ப.ராமகிருஷ்ணன் கூறும்போது, "பருவ காலத்துக்கு ஏற்ப யானைகள் கோவை வனப் பகுதிகளுக்கு கட்டாயம் வலசை வந்தாக வேண்டிய நிலையில் உள்ளன. ஏனெனில், ஜனவரி முதல் மே வரை முதுமலை, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் அவை உண்பதற்கு ஏற்ற உணவு கிடைக்காது. எனவே, கோவையில் கிடைக்கும் மரப்பட்டைகள், இலைகளை சாப்பிட யானைகள் வருகின்றன. கோவையின் மேற்கு பக்கம் மலைச்சரிவுகளும், கிழக்குப் பக்கம் பட்டா நிலங்களும் இருப்பதால் இடைப்பட்ட மலையடிவார பகுதிகளையே அவை அதிகம் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் யானை-மனித மோதல் அதிகம் நடைபெறும் இடமாக கோவை வனக் கோட்டம் உள்ளதற்கு, அடிவாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் வந்துள்ள பெரிய அளவிலான கட்டுமானங்களும், விவசாய முறை மாற்றமுமே காரணம். உணவு பற்றாக்குறை காலங்களில் வேளாண் பயிர்கள் யானைகளை ஈர்க்கின்றன. யானைகள் வருவதைத் தடுக்க கொண்டுவரப்பட்ட சோலார் மின் வேலி, அகழி அமைக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக அமையவில்லை. இதுபோன்ற திட்டங்களை மக்களின் பங்கேற்போடு மேற்கொள்வதோடு, தொடர் பராமரிப்பும் அவசியம். யானைகள் தொடர் சேதங்களை விளைவிக்கும்போது அவற்றுக்கு எதிரான மன நிலைக்கு மக்கள் வந்துவிடுகின்றனர். அதனால், அவற்றை தடுக்கும் வழிகளை தாங்களே மேற்கொள்கின்றனர். எனவே, காட்டைவிட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்கும் திட்டங்களில் மக்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்" என்றார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT