Published : 20 Sep 2020 07:31 AM
Last Updated : 20 Sep 2020 07:31 AM
தமிழகத்தில் முதல் தனியார் சொகுசு ரயில் சேவை சென்னை - திருப்பதி இடையே விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது குறித்து விவேக் தேவ்ராய் குழு 2015-ம் ஆண்டு பல்வேறு முக்கிய பரிந்துரைகளை தெரிவித்தது. பயணிகள் ரயிலை தனியார் இயக்குவது, வருவாயை பெருக்க ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளித்தல் உட்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில்வே துறை அறிமுகம் செய்து வருகிறது. இதில், பயணிகள் ரயில்களை தனியார் இயக்குவதில் மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 109 முக்கிய வழித்தடங்களில் 151 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான வழித்தடம், கட்டண விவரம், பயணிகளுக்கான சேவைகள், ரயில்வேக்கு வருவாய் ஈட்டி தருவது உட்பட பல்வேறு பணிகளைரயில்வேயின் அந்தந்த மண்டலங்களுடன் இணைந்து ஐஆர்சிடிசி மேற்கொண்டு வருகிறது. தனியார் ரயில் சேவையை எதிர்த்து தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
முதல்கட்டமாக புதுடெல்லி – லக்னோ இடையே முதல் தனியார் ரயில் சேவை கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபரிலும், மும்பை - அகமதாபாத் இடையே 2-வது தனியார் ரயில் சேவை கடந்த ஜனவரியிலும் தொடங்கப்பட்டன. தேஜஸ் சொகுசு ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் பாதுகாப்பாகவும் குறைந்த நேரத்தில் பயணம் செய்யும் வகையிலும் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழக பகுதிகளில் இருந்து சென்னை - மதுரை, சென்னை - மங்களூர், சென்னை - கோயம்புத்தூர், திருச்சி - சென்னை, கன்னியாகுமரி - சென்னை, சென்னை - புதுடெல்லி, சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் 26 தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து முதல் முறையாக சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே தனியார் தேஜஸ் சொகுசு ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. வாரம்தோறும் சனிக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் இந்த சொகுசு ரயில் இரவு 10.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதுபோல், ஞாயிறுகாலை 9.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.50 மணிக்கு சென்னைசென்ட்ரல் வரும் என காலஅட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் ரேணிகுண்டாமற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். இதேபோல், எர்ணாகுளம் - கொச்சுவேலி இடையே வாரம் மூன்று நாட்களுக்கு தனியார் ரயில் இயக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் இருந்து முதல் முறையாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தனியார் சொகுசு ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே, 2 வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் பாதுகாப்பாகவும் குறைந்த நேரத்தில் பயணம் செய்யும் வகையிலும் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயிலில் டி.வி, ரேடியோ, வைஃபை வசதி, ஏசி வசதி, உணவுகள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன.
ரயில் பயணிகளுக்கு காப்பீடுவசதி, ரயில்கள் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது போன்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த விதிமுறைகளைப் பின்பற்றியே தெற்குரயில்வேயிலும் சில வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே முதல் தனியார் ரயில்சேவை தொடங்கவுள்ளதால், சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ரயில்வே வாரியம் அனுமதி அளித்தவுடன், ரயிலில் மொத்தபெட்டிகள் இணைப்பு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’’ என்றனர்.
பல மடங்கு கட்டணம் வசூல்
இதுதொடர்பாக டிஆர்இயு உதவி தலைவர் இளங்கோவன் கூறும்போது, ‘‘ரயில்வேயில் ஏற்கெனவே அறிவித்த தனியார் ரயில்கள் பட்டியலில் இந்த வழித்தடம் இல்லை. தற்போது, அவசர அவசரமாக இந்தத் தடத்தில் தனியார் ரயிலை இயக்க முடிவு செய்திருப்பது ஏன்?.தனியார் ரயில்களில் கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியார்நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதால், ரயில் கட்டணம் பல மடங்கு உயரும். இதனால், பயணிகள் பாதிக்கப்படுவார்கள். மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தை பயன்படுத்தி, தனியார் ரயில்களை இயக்க இருப்பது கண்டனத்துக்குரியது. தனியார் ரயில்களை இயக்குவதால், ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, ரயில்வேயில் உள்ள நிரந்தர வேலைவாய்ப்புகள் பறிபோகும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...