Published : 07 May 2014 11:18 AM
Last Updated : 07 May 2014 11:18 AM

புதுப்பெண் கொலையில் தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகள்

காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொன்று, போரூர் ஏரியில் வீசிச்சென்ற கொலையாளியைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை போரூர் ஏரியில் 3-ம் தேதி ஒரு சாக்கு மூட்டை மிதந்தது. சந்தேகப்படும் வகையில் இருந்த அந்த சாக்கு மூட்டையை போலீஸார் கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதற்குள் தலை, கைகள் தனியாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. விசாரணையில் அந்த பெண் பெயர் ரேகா(25) என்பதும், நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.

ஸ்ரீராம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவர் ரேகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் மனைவி ரேகாவை காணவில்லை என்று கடந்த 1-ம் தேதி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஸ்ரீராம் புகார் கொடுத்தார்.

கே.கே நகர் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 4 மாதங்களாக ரேகா பயிற்சியாளராக வேலை செய்திருந்தார். அதற்கு முன்பு கிண்டியில் உள்ள கால்சென்டரில் அவர் வேலை பார்த்தார். அப்போது கால்சென்டரின் கார் ஓட்டுநரான சாம்சன் ரேகாவை காதலித்ததாக கூறப்படுகிறது. அவரது தொல்லை தாங்காமல் ரேகா அந்த வேலையை விட்டு விட்டு உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்துள்ளார். இதனால் ரேகாவின் கொலையில் டிரைவர் சாம்சன் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கார் ஓட்டுநர் சாம்சனின் வீடு மாதவரத்தில் உள்ளது. கடந்த 4 நாட்களாக சாம்சன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்தான் கொலை செய்திருப்பார் என்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர். அவரது காரை கைப்பற்றி போரூர் காவல் நிலையம் எடுத்து வந்தனர்.

ரேகாவின் உடலை ஏற்றிச் சென்றதற்கான அடையாளங்கள் ஏதாவது அந்த காரில் உள்ளதா என்று தடயவியல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது காரில் ஒரு இடத்தில் ரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரத்தத்தை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். காரில் இருந்த ரத்தமும், ரேகாவின் ரத்தமும் ஒன்று தானா? என்பதற்கான சோதனை தற்போது நடந்து வருகிறது. தலைமறைவாக இருக்கும் கார் டிரைவர் சாம்சனை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x