Published : 19 Sep 2020 06:27 PM
Last Updated : 19 Sep 2020 06:27 PM
சென்னை சர்வதேச - உள்ளூர் விமான நிலையங்களுக்கு 1989 ஆம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்தபோது சூட்டப்பட்ட ‘அண்ணா சர்வதேச விமான நிலையம்’, ‘காமராஜர் உள்ளூர் விமான நிலையம்’ பெயர்களை இருட்டடிப்பு செய்வதை நிறுத்தி, அவர்கள் பெயருடன் அறிவிப்புகளை முறையாகச் செய்திட வேண்டும் என மத்திய அமைச்சருக்கு ஆர்.எஸ்.பாரதி, கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு ஆர்.எஸ்.பாரதி எழுதிய கடிதம்:
“வணக்கம். நான், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை புரியும்போதும் அல்லது புறப்படும்போதும் தவறான முறையில் செய்யப்படும் அறிவிப்பு குறித்த விவரத்தினை தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
1989-ம் ஆண்டு கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது, சென்னை உள்ளூர் விமான முனையத்தினை “காமராஜர் விமான நிலையம்” என்றும் , சென்னை பன்னாட்டு விமான நிலையத்தினை “அண்ணா சர்வதேச விமான நிலையம்” என்றும் அறிவித்தது பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
அவ்வாறு பெயர் சூட்டப்பட்ட பின்னரும், பெரும்பாலும் சென்னை விமான நிலையம் என்றும், சென்னை சர்வதேச விமான நிலையம் என்றும் தற்போதும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சென்னை விமான நிலையப் பெயர்கள் குறித்த அறிவிப்புகளை முறையாகச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நெறிமுறைக் கட்டளைகள் வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT