Published : 19 Sep 2020 05:52 PM
Last Updated : 19 Sep 2020 05:52 PM
சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் 200 டன் கிராபைட் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் ஊழியர்களின் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியில் இருந்து பூவந்தி செல்லும் வழியில் 3 லட்சம் டன் கிராபைட் இருப்பதாக தேசிய கனிமவள நிபுணர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து கிராபைட் ஆலைக்காக அரசு கனிம நிறுவனம் (டாமின்) 1971 -ம் ஆண்டு 900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
கடந்த 1988-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1994-ம் ஆண்டு முதல் ஆலை செயல்பட்டு வருகிறது. கிராபைட் மூலம் பென்சில், உராய்வு தடுப்பான்கள், தங்கம், இரும்பு போன்ற உலோகங்களை உருக்கும் உலை (குருசுபுல்), ராக்கெட், விமானத்தில் அதிக வெப்ப நிலை தாங்கும் பொருட்கள் தயாரிக்க முடியும்.
சிவகங்கை பகுதியில் உபத்தொழிற்சாலை துவங்கப்படாததால் தோண்டி எடுக்கப்படும் கிராபைட் கற்கள் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
இந்த ஆலையில் தற்போது 178 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். லாபத்தில் இயங்கி வந்த இந்த ஆலையின் லைசன்சை அதிகாரிகள் புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் ஆலை ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது.
பல்வேறு தரப்பினர் முயற்சியால் லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டு ஜூன் மாதத்தில் மீண்டும் ஆலை செயல்பட தொடங்கியது. ஆலையை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தொடங்கி வைத்தனர்.
ஆலை ஒரு மாதமே செயல்பட்டநிலையில் உற்பத்தி செய்யப்பட்ட கிராபைட்டை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் விற்பனையாகாமல் 200 டன்னுக்கு மேல் கிராபைட் தேக்கமடைந்தது.
இதையடுத்து ஆலை உற்பத்தியை நிறுத்தியதோடு, ஊழியர்களுக்கு ஊதியமும் பாதியே வழங்குகின்றனர். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து கிராபைட் தொழிற்சாலை ஊழியர்கள் கூறுகையில், ‘ ஆலை முடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே பாதி ஊதியம் தான் வழங்குகின்றனர். ஆலை செயல்பட தொடங்கியதும் ஊதியம் உயர்த்தப்படும் என தெரிவித்தனர். ஆனால் ஒன்றரை ஆண்டாக ஆலை செயல்படாததால் வாடிக்கையாளர்கள் வேறு இடங்களில் இருந்து கிராபைட்டை வாங்க தொடங்கிவிட்டனர்.
இதனால் கிராபைட்டை விற்பனை செய்ய முடியவில்லை. ஆலை நிர்வாகமும் கிராபைட்டை விற்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதையடுத்து ஆலையும் செயல்படவில்லை, எங்களது ஊதியத்தையும் பாதியே வழங்குகின்றனர். அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
ஆனால் எங்களுக்கு 7 சதவீதமே வழங்குகின்றனர். லாபத்தில் இயங்கி வந்த ஆலையை அதிகாரிகளின் மெத்தனத்தால் மூடிவிட்டனர், என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT