Published : 19 Sep 2020 05:34 PM
Last Updated : 19 Sep 2020 05:34 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வித்துறை இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பணிநியமன ஆணையை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.
இதில் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியை தேர்ந்தெடுத்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் கல்வித்துறையில் இளநிலை பணியாளராக தேர்வு செய்யப்பட்ட 633 பேருக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி எட்டயபுரம் பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற 22 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், வட்டாட்சியர் அழகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT