Published : 19 Sep 2020 05:42 PM
Last Updated : 19 Sep 2020 05:42 PM

பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்கள்; அதிமுக அரசு முந்திக்கொண்டு நிறைவேற்றுகிறது; மார்க்சிஸ்ட் விமர்சனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை அதிமுக அரசு முந்திக்கொண்டு நிறைவேற்றுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (செப். 19) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடைசி நாளில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மோசமான பாதிப்புகளை உருவாக்கக்கூடிய இச்சட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

முதலாவதாக, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டத்தில் ஒரு மிக முக்கியமான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு கிராமங்கள், நகரங்கள் அமைப்பது, விஸ்தரிப்புக்கான பணிகளை மேற்கொள்ளும்போது நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களிடம் கலாந்தாலோசித்த பின்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனிமேல் கிராமங்கள், நகரங்களில் விஸ்தரிப்பு பணிகளுக்காக அரசு நிலங்கள் மற்றும் வீட்டுமனைகள், கட்டிடங்கள் ஆகியவற்றைக் கையகப்படுத்த வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட நிலம் அல்லது கட்டிட உரிமையாளர்களோடு கலந்து பேசாமல் நேரடியாக கையகப்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இது நில உரிமையாளரின் அடிப்படை உரிமையைத் தட்டிப் பறிப்பதாக அமைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பாஜக அரசுக்கு முன்னரே!

இரண்டாவதாக, தமிழ்நாடு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தும் சட்டம் மேலும் திருத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த 17 ஆம் தேதி அன்று மூன்று முக்கியமான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானது, கார்ப்பரேட் மற்றும் மொத்த வணிகர்களுக்கு வழிதிறந்திட வகை செய்யும் சட்டம் என்ற அடிப்படையில் இச்சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இம்மூன்று சட்டங்களில் ஒன்றாக உள்ள வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்தும் சட்டமும் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி விவசாய உற்பத்திப் பொருட்களைக் கொள்முதல் செய்ய விரும்பும் மொத்த வணிகர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு அமைத்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்த நடைமுறையால் விவசாயிகளிடம் ஒரு நியாயமான விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும், அதிகாரிகள் முன்னிலையில் கொள்முதல் செய்யப்படுவதால் உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். தற்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, வியாபாரிகளோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ இனி விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

மேலும், வியாபாரிகளோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ தாங்களே சந்தை முற்றங்களை உருவாக்கி அங்கு கொள்முதல் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மோசமான சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 17-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிமுக அரசு இதே மாதிரியான ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முதல் நாளே அதாவது, 16-ம் தேதி அன்றே சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

தமிழக அரசு அளித்துள்ள விளக்கக் குறிப்பில், மத்திய அரசு பிறப்பித்துள்ள மாதிரி அவசரச் சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றும்பொருட்டு இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாஜக அரசின் கொள்கைகளை பாஜகவை விட தீவிரமாக அமல்படுத்தும் கட்சியாக அதிமுக மாறியுள்ளது. மேலும், மத்திய அரசு நிறைவேற்றக் கூடிய மாதிரிச் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை. அவ்வாறு இருக்கும்போது அதிமுக அரசு மத்திய அரசின் சட்டத்தை, மத்திய அரசு சட்டமாக்குவதற்கு முன்னரே நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?.

மேலும், இதுவரை தமிழ்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான கொள்முதல் சந்தைகளை அனுமதிக்காத போது இப்போது அவசர, அவசரமாக அதை அனுமதிக்கிற சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?.

இவ்வாறு மொத்த வியாபாரிகள் நேரிடையாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய அனுமதித்தால் அரசு கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து, பொது விநியோக முறையும் படிப்படியாக சீர்குலைக்கப்படும் ஆபத்து ஏற்படும். ஒட்டுமொத்தத்தில் விவசாய உற்பத்தி, கொள்முதல், விநியோகம் அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்குகிற பாஜக அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் அதிமுக அரசு தயக்கமின்றி நிறைவேற்றிக் கொண்டுள்ளது என்பதே உண்மையாகும்.

இதனைக் கண்டித்து குரலெழுப்ப அனைவரும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x