Published : 19 Sep 2020 05:23 PM
Last Updated : 19 Sep 2020 05:23 PM

வேளாண் விரோதச் சட்டங்களை ஆதரித்ததன் மூலம் அதிமுக விவசாயிகளுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளது; முத்தரசன் விமர்சனம்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

வேளாண் விரோதச் சட்டங்களை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 19) வெளியிட்ட அறிக்கை:

"விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் வணிக சட்டங்களை மத்திய அரசு, கடந்த ஜூன் 5 ஆம் தேதி அவசர சட்டங்களாக பிறப்பித்த போதே நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கரோனா நோய் தொற்று பரவல் நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டங்களை அலட்சியப்படுத்தி வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் ஆளும்தரப்பு உட்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட்டு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை நிராகரித்து அவசரச் சட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று, சட்டங்களாக நிறைவேற்றியுள்ளது.

இந்தச் சட்டங்களின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற கொள்ளை லாப வேட்டைக்கு கிராமப் பொருளாதாரத்தை, குறிப்பாக, விவசாயிகள் நலனும் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் 30 ஆண்டுகளாக பெற்று வரும் இலவச மின்சாரத்தை பறிக்கவும், மின் வழங்கல் கொள்கை முடிவு எடுக்கும் மாநில அதிகாரத்தை மறுக்கவும் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மின்சார திருத்த சட்ட வரைவு மசோதா 2020-ஐ அறிமுகப்படுத்தியதில் தொடங்கி, விவசாயிகள் மீதான தாக்குதலை மத்திய பாஜக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

மூச்சுக்கு முந்நூறு தடவை 'விவசாயி மகன்' என பெருமை பேசி வரும் எடப்பாடி கே. பழனிசாமியும், அதிமுகவும் வேளாண் விரோதச் சட்டங்களை ஆதரித்ததன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளது.

பெருவணிக நிறுவனங்களிடம் விவசாயத்தை அடகு வைத்து, விவசாயிகளை நவீன கொத்தடிமையாக்கும் பாஜக, அதிமுக அரசுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்கு குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

வேளாண் விரோத சட்டங்களை விலக்கிக் கொள்ளவும், இலவச மின்சார உரிமையை பாதுகாக்கவும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் சக்திகளும் இணைந்து இயக்கத்தை தீவிரமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது"

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x