Published : 19 Sep 2020 02:43 PM
Last Updated : 19 Sep 2020 02:43 PM

'கனெக்ட் - 2020' மாநாடு; தமிழகத்தில் இணையம் தொடர்பான மூன்று கொள்கைகள்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

கனெக்ட் - 2020 மாநாடு

சென்னை

'கனெக்ட் - 2020' மாநாட்டில், தமிழகத்தில் இணையம் சம்பந்தமான மூன்று கொள்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் செப்டம்பர் 15 முதல் 19-ம் தேதி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் 'CONNECT 2020' மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020, தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கை 2020 ஆகியவற்றை வெளியிட்டார்.

தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. அரசுத் துறைகள் மக்களுக்கான அரசின் சேவைகளை இணையவழியில் அளித்து வரும் நிலையில், அச்சேவைகள் மற்றும் அவை சார்ந்த தகவல் உட்கட்டமைப்புகளை இணையவழி ஊடுருவல் மற்றும் தாக்குதல்களிலிருந்து திறம்படப் பாதுகாத்திட, மாநிலத்திற்கான இணையப் பாதுகாப்பு கொள்கையை வரையறுப்பது இன்றியமையாததாகிறது.

அதன்படி, தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020'-ஐ தமிழ்நாடு முதல்வர் இன்று வெளியிட்டார். இக்கொள்கை, மாநிலத்தில் இணையப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த பல்வேறு இனங்களில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் புகுத்தி அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கிடவும், மனித வளத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு உறுதி கொண்டுள்ளது.

அதன்படி, அரசின் சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை இணையவழியில் நம்பகத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான முறையில் செயல்படுத்திட, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான பிளாக்செயின் (Blockchain) எனப்படும் ‘நம்பிக்கை இணையத் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு அரசுத் துறைகள் பயன்படுத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020'-ஐ தமிழ்நாடு முதல்வர் இன்று வெளியிட்டார். இதன்மூலம், அரசின் மின்னாளுமைக்காக நம்பிக்கை இணையக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிடும்.

அதுபோலவே, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், பல்வேறு வகையிலான தரவுகளை அவற்றின் வகை, செயல்பாடு மற்றும் பரவல் போன்ற வகைகளில் கூராய்ந்து, அதன்மூலம் அவை தொடர்பான எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்து, அதற்கான விரைவான தீர்வுகளையும் பரிந்துரை செய்யவல்லது. தற்சமயம், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் உலக அளவில் மருத்துவ நோயறிதல், மருந்துப் பொருள் கண்டுபிடிப்புகள், சட்ட அமலாக்கம், ராணுவம், விண்வெளி, கல்வி, ஆளுமை, முதியோர் பராமரிப்பு போன்ற பல துறைகளில் மனித வாழ்க்கையோடு இணைந்து இயங்குகின்றது.

இத்தொழில்நுட்பத்தினை தமிழ்நாடு அரசுத் துறைகள் மக்களுக்கான இணையவழிச் சேவைகளை வழங்குவதில் பயன்படுத்திக் கொள்வதற்கான உத்திகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட 'தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கை 2020'-ஐ தமிழ்நாடு முதல்வர் இன்று வெளியிட்டார். இதன்மூலம் வெளிப்படையான ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் 'CONNECT 2020' மாநாட்டில், இந்த ஆண்டுக்கான சிறந்த தொழில்முனைவோருக்கான விருதினை சென்னை, கான்ஸ்யூமெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எல்.என்.சாய் பிரசாந்த்திற்கும், தனியார் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருதினை லார்சன் அண்டு ட்யூப்ரோ லிமிடெட் - ஸ்மார்ட் வேர்ல்ட் அண்டு கம்யூனிகேசன் பிசினஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் ஆர். சீனிவாசனுக்கும்; பொதுத் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்கான விருதினை பதிவுத்துறைத் தலைவர் ஜோதி நிர்மலாவுக்கும் வழங்கினார்.

உலகளாவிய செல்வாக்கு பெற்ற நபருக்கான விருதினை ப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் கிரீஷ் மாத்ருபூதத்திற்கும்; சமூகத் தொழில்முனைவோருக்கான விருதினை கோவை - பர்பிள் அயர்னிங் நிறுவனத்தின் இயக்குநர் அமானுல்லாவுக்கும்; ஊக்குவித்திடும் வகையிலான முன்மாதிரி நபருக்கான விருதினை இந்த்ரி ஆக்சஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ராமநாதனுக்கும்; கோவிட் சாதனையாளருக்கான விருதினை ஹெலிக்சான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் சங்கர் ராஜாவுக்கும்; சகிப்புத் தன்மைக்கான விருதினை கோவை - சி.ஜி.வேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷுக்கும்; வழிகாட்டியாளர் விருதினை ப்யூச்சர் போக்கஸ் இன்போடெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எம்.வி. சுப்பிரமணியனுக்கும் வழங்கி முதல்வர் கவுரவித்தார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x