Published : 19 Sep 2020 12:45 PM
Last Updated : 19 Sep 2020 12:45 PM
மனு அளிக்கச் சென்ற தங்களை அவமரியாதையாக நடத்தியதாக தலைமைச் செயலாளர் சண்முகம் மீது திமுக எம்.பி.க்கள் அளித்த புகாரின் மீது நாடாளுமன்ற உரிமைக் குழு செப்.24-ல் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு திமுகவின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ், நிவாரணப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைகளான மருந்துகள் என அனைத்தும் நேரடியாகவே வழங்கப்பட்டன.
'திமுகவின் முன் மக்கள் வைத்துள்ள 1 லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பி அவர்களைச் செயல்பட வைக்கப்போகிறோம்' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து, கடந்த மே மாதம் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து மக்களின் கோரிக்கை மனுக்களை ஒப்படைத்தனர். அப்போது, திமுக எம்.பி.க்களைத் தலைமைச் செயலாளர் அவமரியாதை செய்யும் விதமாக நடந்துகொண்டதாக திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அப்போது வெளியிட்ட அறிக்கையில், “ திமுக மக்களவை எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் நானும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்தோம்.
அதாவது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் 'ஒன்றிணைவோம் வா' திட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் கரோனா நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்துள்ளனர். இதனை அரசிடம் ஒப்படைத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தித்தோம்.
நாங்கள் மூத்த எம்.பி.க்கள் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் மரியாதைக் குறைவாக தலைமைச் செயலாளர் சண்முகம் நடந்துகொண்டார். அதாவது குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக் கூடப் பின்பற்றவில்லை. இருப்பினும் நாங்கள் பொறுமையோடு 'ஒன்றிணைவோம் வா' செயல் திட்டம் பற்றி விளக்கினோம்.
மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இதற்கான காலக்கெடுவின் விவரம் பற்றிக் கேட்டோம். அதற்கு, 'எப்போது நடவடிக்கை எடுக்கமுடியும் என்று சொல்ல முடியாது' என்றார்.
மேலும் எடுத்தெறிந்து பேசும் விதமாக "This is the problem with you people" என்று பொறுப்பற்ற முறையில் உரத்த குரலில் கூறினார். எடப்பாடி அரசுக்கு ஏற்றாற்போல் நடக்கிறார் தலைமைச் செயலாளர்” எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு மறுநாள் தலைமைச் செயலாளர் சண்முகம் உரிய விளக்கம் அளித்திருந்தார்.
"திமுக தலைவர்கள் கூறியதுபோன்று தாம் அவமரியாதையாக அவர்களை நடத்தவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நான் அவர்களை வரவேற்று அமர வைப்பதில் எந்த அவமதிப்பும் செய்யவில்லை என்பதற்கு அனைவரும் சோபாவில் அமர்ந்துள்ள, நாளிதழில் வெளியான படமே சாட்சி.
ஆனால், தலைமைச் செயலாளருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாதது போல தயாநிதி மாறன், எம்.பி., கருத்து தெரிவித்து டி.ஆர்.பாலுவும் ஒரு அறிக்கையையும் வெளியிட்டு பத்திரிகைகளிலும் வெளியிட்டுள்ளது வருந்தத்தக்கது. இதில் எதிர்க்கட்சித் தலைவரையோ, என்னைச் சந்திக்க வந்த தலைவர்களையோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணம் எள்ளளவும் எனக்கு இல்லை.
நான் ஒரு சாதாரணமான அரசு ஊழியன். அரசியல்வாதியல்ல. மக்களுக்காகப் பணியாற்றுவதுதான் என் வேலை. எனவே,எனக்கு யாரையும் உதாசீனப்படுத்த வேண்டும் என்றோ, அவமதிக்க வேண்டும் என்றோ எந்தக் காலத்திலும் நினைத்தது இல்லை.
என் பணியை அர்ப்பணிப்போடு செய்கிறேன். மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் எனக்குப் பெரும் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து செயல்படுவதால்தான் உடனடியாக இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அயராது நாங்கள் பணியாற்றி வரும் நாங்கள் இப்படிப்பட்ட சோதனையான நேரத்தில் கூட, கொடுத்த மனுக்களை நான் பெற்றுக்கொண்டேன். இத்தகைய சூழ்நிலையில், தற்போது உள்ள நிலையை நன்கு அறிந்தவர்கள், இப்படி பத்திரிகையில் திரித்துப் பேசுவது, உண்மையில் மனவேதனையை அளிக்கிறது.
யார் உண்மையைப் பேசுகிறார்கள்? யார் திரித்துப் பேசுகிறார்கள்? என்பதை எதிர்க்கட்சித் தலைவரும் மக்களுமே புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்".
இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் தங்களை அவமதித்துவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான தேதியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. திமுக எம்.பி.க்கள் அளித்த புகாரின்பேரில் வரும் 24-ம் தேதி உரிமைக் குழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கமிட்டிமுன் ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் தங்கள் பணிகளை ஒதுக்கிவைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று நடக்கும் விசாரணையில் புகார் அளித்த திமுக எம்.பி.க்கள் அளிக்கும் வாக்குமூலத்தை அடுத்து, உரிமைக் குழு விசாரணைக்கு உகந்ததாகக் கருதும் பட்சத்தில், விசாரணைக்கு எடுத்து தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT