Published : 19 Sep 2020 12:23 PM
Last Updated : 19 Sep 2020 12:23 PM
பி.எட் படிப்புக்கு நடத்தப்படுவது போல ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பில்(D.T.Ed) முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்.21 முதல் 28-ம் தேதி வரையும், இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்.29 முதல் அக்.7-ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு(பி.எட்) இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் எனவும், முதலாமாண்டு மாணவர்கள் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு மட்டும் நேரடியாக தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம் என ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவி ஒருவர் கூறியது: பி.எட் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படுவது போல எங்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும். பி.எட் உட்பட பல பட்டப்படிப்புகளுக்கு இறுதியாண்டு தவிர்த்த மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், ஆசிரியர் பட்டயப் பயிற்சி முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படுவது ஏன் என தெரிய வில்லை.
மேலும், ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு முடித்து, அரியர் வைத்துள்ள மாணவர்கள் பலர் தற்போது ஏதேனும் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். தற்போது ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வு அறிவிக்கப்பட்ட அதே தேதியில், அவர்கள் தற்போது படித்து வரும் பட்டப்படிப்புக்கான ஆன் லைன் தேர்வையும் எதிர்கொள்ளும் குழப்ப நிலையும் உள்ளது என்றார்.
இதுகுறித்து காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வி யியல் கல்லூரி முதல்வர்(பொ) எம்.எஸ்.ஆர்.கிருஷ்ண பிரசாத் கூறியது: பி.எட் தேர்வுகளை பொறுத்தவரை புதுச் சேரி பல்கலைக்கழத்தின் முடிவின்படி ஆன்லைன் மூலம் நடத்தப் படுகின்றன. ஆன்லைன் தேர்வுக் கான வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதலாம். ஆனால், ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வுகள் தமிழக அரசின் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் முடிவை சார்ந்து நடத்தப்படுகிறது என்றார்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி முடிவெடுக்க வேண்டும் என்று ஆசிரியர் பட்டயப் பயிற்சி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT