Published : 19 Sep 2020 08:07 AM
Last Updated : 19 Sep 2020 08:07 AM
வெளிநாடுகளில் தவிக்கும் 69 ஆயிரம் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரோனா பரவல் காரணமாக வேலை இழந்தவர்களும், தாயகம்திரும்ப விரும்பியவர்களும் பல்வேறு நாடுகளில் இருந்துதமிழகம் வர விண்ணப்பித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக 1.48 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 4 மாதங்களில் 79 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே அழைத்து வரப்பட்டுள்ளனர். சுமார் 69 ஆயிரம் தமிழர்கள் சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தனிமை முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த தகவலை மக்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்திருக்கிறார். உலகின் அனைத்து நாடுகளும் பிற நாடுகளில் தங்கியிருந்த தங்கள் நாட்டு மக்களை அதிகபட்சமாக 2 மாதங்களில் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டன. இந்தியாவில்கூட, பிறமாநிலங்களைச் சேர்ந்த வெளிநாட்டு இந்தியர்கள் கிட்டத்தட்ட தாயகம் அழைத்து வரப்பட்டு விட்டனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் இன்னும் அழைத்து வரப்படவில்லை. தமிழர்விஷயத்தில் மட்டும் பாகுபாடு காட்டப்படுவது நியாயம் இல்லை.
அவர்கள் யாரும் வசதியானவர்கள் அல்ல. அனைவருமே பிழைப்பு தேடிச் சென்றவர்கள். மத்திய அரசு நினைத்தால் 3 நாட்களுக்குள் அனைத்து தமிழர்களையும் அழைத்து வர முடியும். தமிழகத்தில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள நிலையில், ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்கி தமிழர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT