Published : 18 Sep 2020 08:35 PM
Last Updated : 18 Sep 2020 08:35 PM
செப்.28 அன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல், சசிகலா விடுதலை, மாவட்டங்கள் பிரிப்பு, பாஜகவுடனான கூட்டணிப் பிரச்சினை, முதல்வர் வேட்பாளர் சர்ச்சை என அதிமுகவில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் பின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:
''அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை அலுவலகத்தில் இன்று மாலை (18.9.2020 - வெள்ளிக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மூத்த தலைமைக் கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் செப்.28 காலை 9.45 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். கூட்டத்திற்கான அழைப்பிதழ் செயற்குழு உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு மூலம் நடக்கிறது. அதிமுகவின் பிரதான அமைப்பு பொதுக்குழு, அதற்கு மேல் செயற்குழு, அதற்கும் மேலே தலைமைச் செயற்குழு நிர்வாகிகள், துணை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் உள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் 2,500 பேரும், செயற்குழுவில் 1,000 பேரும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT