Last Updated : 18 Sep, 2020 07:42 PM

2  

Published : 18 Sep 2020 07:42 PM
Last Updated : 18 Sep 2020 07:42 PM

மீன்பிடி ஏலம் வழங்கப்படும் நீர் நிலைகளில் கால்நடைகள் தண்ணீர் பருக அனுமதிக்க வேண்டும்: எழுத்தாளர் சோ.தர்மனின் பதிவை சுட்டிக்காட்டி நீதிபதி உத்தரவு

மதுரை

மீன்பிடி ஏலம் வழங்கப்படும் நீர் நிலைகளில் கால்நடைகள் தண்ணர் பருகுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சாகித்ய அகாடமி எழுத்தாளர் சோ.தர்மனின் சமூக வலைதள பதிவை மேற்கொள்காட்டி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி போடியைச் சேர்ந்த மணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

போடி அருகே அம்மாபட்டியில் மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் 3 ஆண்டுகளுக்கு மீன் வளர்ப்பு குத்தகைக்கான அனுமதி போடி மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டிற்கு ரூ.5.87 லட்சமும், 2ம் ஆண்டிற்கு 6.46 லட்சமும், 3ம் ஆண்டிற்கு ரூ.7.10 லட்சமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்நடைத்துறை அரசாணைப்படி, மீனின் இருப்பு, உற்பத்தி திறன், தண்ணீர் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டு ஒப்பந்தத் தொகை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் விதிப்படி விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

கடந்த முறை அதிக தொகைக்கு மீன்பிடி ஏலம் விடப்பட்டது. தற்போதைய ஏலத்தால் அரசுக்கு ரூ.1.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்கப்பட்ட மீன்பிடி ஏலத்தை ரத்து செய்து புதிதாக ஏலம் விட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மீன்பிடி ஏலம் மிகவும் குறைந்த தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது. வருவாய் உள்ளிட்ட எதையும் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. கண்மாயின் மீன் பிடி உரிமைக்காக புதிய ஏலம் விட மீன்வளத்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுப்பவர்கள் ஏலத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். தற்போது ஏலம் எடுத்துள்ள சங்கம் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுத்தால் அவர்களுக்கு வழங்கலாம். இல்லாவிட்டால் அனுமதியை ரத்து செய்து கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு வழங்கலாம்.

நீர்நிலைகளில் மீன் வளர்ப்பு தொடர்பாக சாகித்ய அகாடமி எழுத்தாளர் சோ.தர்மன் எழுதியதை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. அதில் அவர், மேய்ச்சல் மாடுகளும், கால்நடைகளும் தாகத்திற்கு தண்ணீர் அருந்த முடியவில்லை.

பறவைகள் வெடி வைத்து விரட்டப்படுகின்றன. இதனால், கால்நடைகள் குடிநீருக்காக பல கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் வாயில்லா ஜீவன்கள் தவிக்கின்றன.

தயவு செய்து கண்மாய்களை குத்தகைக்கு விட்டு கம்பெனியாக்குவதை நிறுத்துங்கள். கண்மாய்களும், நீர் நிலைகளும், ஒரு நாட்டின் ரத்த நாளங்கள் என்பதை பகுத்தறிவு உங்களுக்கு சொல்லவில்லையா, அப்படியானால் உங்கள் பகுத்தறிவுக்கு என்ன அர்த்தம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவரது எழுத்துக்கள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு மீன் குத்தகை தொடர்பான விதிகளை தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும். தமிழ் மக்கள் காலம் காலமாக கடைபிடித்து வரும் பாரம்பரி பழக்க, வழக்கம் மற்றும் உரிமைகளை மதிக்க வேண்டும் என மீன்பிடி குத்தகைதாரர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x