Last Updated : 18 Sep, 2020 05:44 PM

1  

Published : 18 Sep 2020 05:44 PM
Last Updated : 18 Sep 2020 05:44 PM

உயிருள்ளவரை ஸ்டாலினைத் தோளில் சுமப்பேன்; தமிழக முதல்வராக அவரை அரியணையில் அமர வைப்பேன்: துரைமுருகன் பேச்சு

நிகழ்ச்சியில் பேசும் துரைமுருகன்.

வாணியம்பாடி

உயிருள்ள வரை ஸ்டாலினைத் தோளில் சுமப்பேன் என்றும், அடுத்த 4 மாதத்தில் அவரைத் தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்பேன் என்றும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் பொறுப்பேற்ற பிறகு ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்துக்கு நேற்று வந்தார். இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு இன்று (செப். 18) அவர் வந்தார்.

திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் ஆலங்காயம் மற்றும் நியூடவுன் பகுதியில் துரைமுருகனுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக மாவட்டப் பொறுப்பாளர் தேவராஜ், நகரச் செயலாளர் சாரதிகுமார் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, துரைமுருகன் பேசியதாவது:

"காட்பாடி அருகே சிறிய கிராமத்தில் பிறந்த நான் தற்போது திமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. திமுகவில் மூத்தவன் என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்தப் பொறுப்புக்கு என்னைத் தேர்வு செய்துள்ளார்.

நான் திமுகவின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து கருணாநிதி வீட்டுக்குச் சென்றபோது ஸ்டாலின் பள்ளி மாணவர். அதன் பிறகு கட்சியில் பல்வேறு பதவிகளைப் பெற்று தற்போது தலைவர் பதவியில் இருக்கிறார். என்னை விட அதிகமாக கட்சிக்காக அவர் உழைக்கிறார். என் உடலில் உயிருள்ள வரை ஸ்டாலினை என் தோளில் சுமப்பேன். அடுத்த 4 மாதத்தில் அவரைத் தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்பேன்.

என்னைப் பொறுத்தவரை எனக்கு குடும்பம், சொத்து, வாரிசை விட கட்சிதான் முக்கியம். என் கட்சிக்கு எதிராக இமயமலையே வந்தாலும் அதைத் தூசி போல் கருதுவேன்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆளும் கட்சியாக ஆட்சியில் அமரும்''.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் துரைமுருகன் கூறும்போது, "ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தைப் பாதிக்கும் பெரிய பிரச்சினையே பாலாறு பிரச்சினைதான். பாலாற்றின் ஆழம் என்னவென்று தெரியாமல் பலர் பேசுகின்றனர். பேத்தமங்கலத்தில் ஏரி திறந்தால்தான் நமக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பது அல்ல. காவிரி குண்டாறு இணைப்பு என ஒன்று உள்ளது.

காவிரியில் மாயனூர் என்ற இடத்தில் ரூ.189 கோடியில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் தடுப்பணை ஒன்று திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அந்தத் தடுப்பணை வழியாக தண்ணீர் கொண்டு வருவதற்குள் திமுக ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. ஆனால், அந்தத் தண்ணீரைக் கொண்டு வர எந்த முயற்சியையும் அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை.

ஆட்சி முடிவுக்கு வரும் இந்த நேரத்தில் தண்ணீரை எப்படி எடுத்துச் செல்வது என்பதைத் தீர்மானிக்க கமிட்டி ஒன்றை போட்டுள்ளார்கள். அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அடுத்து ஆட்சி அமைக்க உள்ள திமுக, இப்பணிகளை விரைந்து செய்து முடிக்கும்.

அதேபோல, தாமிரபரணி ஆற்றில் மழைக்காலத்தில் அதிகமாக வெளியேறும் உபரி நீரை கருமேனி ஆற்றில் கலக்கும் திட்டமும், சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை செய்யாற்றில் இணைக்க வேண்டும் என்ற திட்டமும் திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகும். இதை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை.

காவிரியில் இருந்து அதிக தண்ணீர் வரும்போது அதைப் பாலாற்றில் கலந்து வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள பாலாற்றுப் பகுதிகளில் 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரைச் சேமித்து விவசாயப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர திமுக ஆட்சி நடவடிக்கை எடுக்கும்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x