Published : 18 Sep 2020 05:12 PM
Last Updated : 18 Sep 2020 05:12 PM
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் புனித இருதய பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் புனித இருதய கான்வென்ட் உயர் நிலைப்பள்ளிகளின் தாளாளர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டத்துக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும் சில அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் தூண்டுதலால் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
அந்த நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அதையேற்காமல் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
குடியுரிமை சட்டத்துக்க எதிராக நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இந்த நோட்டீஸுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதிலை தொகுத்து ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றை தயாரித்து கல்வித்துறை அதிகாரிகள் அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையை 4 வாரத்தில் பள்ளி நிர்வாகம் முடிக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகம் அனுப்பி வைக்கும் ஒருங்கிணைந்த அறிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? கைவிடலாமா? என்பது கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். அதுவரை கல்வித்துறை அதிகாரிகள் தற்போது அனுப்பியுள்ள நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT