Published : 18 Sep 2020 04:27 PM
Last Updated : 18 Sep 2020 04:27 PM
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நடைபெற்ற ரூ.300 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி தாக்கலான மனுவுக்கு ராமநாதபுரம் எஸ்.பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையை சேர்ந்த ஜெயா, இளையான்குடியைச் சேர்ந்த முத்துகண்ணன், தேவகோட்டையைச் சேர்ந்த செல்லப்பன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் ஆனந்த், அவர் மனைவி காயத்ரி, நீதிமணி, அவர் மனைவி மேனகா ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தினர். எங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஓராண்டில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதை நம்பி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் ரூ.300 கோடி அளவுக்கு முதலீடு செய்தனர். பின்னர், அந்தப் பணத்துக்கு முறையாக வட்டி வழங்காமல் மோசடி செய்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மோசடியில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால் விசாரணை மெதுவாக நடைபெற்று வருகிறது.
பணம் முதலீடு செய்தவர்கள் பணம் திரும்பக் கிடைக்காமல் பொருளாதாரரீதியில் கடும் சிரமத்தில் உள்ளனர். மோசடியில் தொடர்புடையவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் பலர் உதவி வருகின்றனர்.
எனவே, போலீஸார் விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரித்து, ராமநாதபுரம் எஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 22-க்கு ஒத்திவைத்தார்.
இந்த மோசடி வழக்கு போலீஸாரிடம் இருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக இந்த மோசடி தொடர்பான மற்றொரு வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT