Published : 18 Sep 2020 04:33 PM
Last Updated : 18 Sep 2020 04:33 PM
புதுக்கோட்டையில் அரசு சித்த மருத்துவர்கள் அளிக்கும் எளிய உடற்பயிற்சியின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விரைந்து குணமடைந்து வருவதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ள அரசு சித்த மருத்துவப் பிரிவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 345 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில், சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் 283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.உம்மல் கதீஜா கூறுகையில், "மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உத்தரவின் பேரில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் எஸ்.கணேஷ் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆலோசனையின்படி, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் கரோனா சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சித்த மருத்துவத்தில் சிறப்பு மருத்துவமான யோகா, பிராணயாமம், வர்மா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று வரும் தொற்று நோயாளர்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகள் பணி மருத்துவர்களைக் கொண்டு யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, 8 வடிவ நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், சுயவர்மப் புள்ளிகள் இயக்குதல் கொண்ட சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதனால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து, நுரையீரலைச் சிறந்த முறையில் செயல்பட வைக்கிறது. மேலும், நோயாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கி நோயில் இருந்து மீள உதவி புரிகிறது.
பிராணயாமம் எனும் மூச்சுப் பயிற்சியானது பூரகம், கும்பகம், இரேசகம் எனும் 3 நிலைகளைக் கொண்டது. இவற்றை முறைப்படி பயிற்சி எடுத்து தினசரி வாழ்வில் பின்பற்றி வந்தால் தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களில் இருந்தும் விடுபடலாம்.
மன அழுத்தம், பயம், மனக்குழப்பம், தூக்கமின்மை ஆகியவற்றைப் போக்கி மனநிலை அமைதியாக யோகா பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT