Published : 18 Sep 2020 03:57 PM
Last Updated : 18 Sep 2020 03:57 PM
பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான எ.லாசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று (செப். 18) செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தமிழகத்தில் கரோனா பாதிப்பு, மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ போதுமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை.
சாமானிய மக்களின் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் இடைத்தரகர்கள் மூலம் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளன. அங்கொன்றும், இங்கொன்றுமாக சிலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இது, கண்துடைப்பு நடவடிக்கையாகவே தெரிகிறது.
எனவே, கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அரசு அறிவித்துள்ளது. இதை உடனடியாக தொடங்குவதோடு, வேலை நாட்களை 200 ஆகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அக். 6 -ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT