Published : 18 Sep 2020 03:37 PM
Last Updated : 18 Sep 2020 03:37 PM

தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரணத் தொகை; இதுவரை கிடைக்காதவர்கள் பதிவு செய்யலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை

சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு கரோனா கால நிவாரணமாக 2 கட்டங்களாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பெறாதவர்கள் தங்கள் அடையாள அட்டையுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000/- நிவாரணத் தொகையை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காலத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 27,195 சாலையோர வியாபாரிகளில் இதுவரை சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, கைப்பேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற விவரங்களை வழங்கிய 14,633 சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக முதல் கட்டமாக ரூ.1000/- மற்றும் இரண்டாம் கட்டமாக ரூ.1000/- சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை ரூ.1000/- வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இதுவரை முதல் மற்றும் இரண்டாம் கட்டம் நிவாரணத் தொகை பெறாத பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள், பெருநகர சென்னை மாநகராட்சியால் தங்களுக்கு வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை (Xerox copy) எண், கைப்பேசி எண் (Mobile No.), வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்புக் கணக்கு எண், கிளை குறியீட்டு எண், IFSC குறியீட்டு எண் போன்ற விவரங்கள் கொண்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (Xerox copies) ஆகியவற்றை சம்பந்தப்பட்ட மண்டலத்தில் வழங்கும் பட்சத்தில் நிவாரணத் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் மாற்ற இயலும்.

எனவே, இந்த வாய்ப்பை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x