Published : 18 Sep 2020 02:20 PM
Last Updated : 18 Sep 2020 02:20 PM

குவைத் இந்தியத் தூதரகத்திலும் இந்தித் திணிப்பு சர்ச்சை: தமிழுக்கு முக்கியத்துவம் தரக் கோரிக்கை

அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ

இந்தி திணிக்கப்படுவதாகச் சொல்லப்படும் விவகாரம் இந்தியாவில் மட்டுமல்லாது குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இப்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தி தினத்தை முன்னிட்டு குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம், தினம் ஒரு இந்தி வார்த்தையை ஆங்கிலம் மற்றும் அரபு மொழிபெயர்ப்புடன் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறது. 'இந்தி திவாஸ் 2020-ஐ முன்னிட்டு தூதரகம் உங்களை இந்தி வார்த்தையை ஆங்கிலம் மற்றும் அரேபிய மொழிபெயர்ப்புடன் '#WordOfHindi' என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி போஸ்ட் செய்ய அழைக்கிறது' என்ற அறிவிப்புடன் வெளியாகும் இந்தத் தகவலுக்கு குவைத்தில் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் ஆட்சேபனை கிளம்பி இருக்கிறது.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பேசிய குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கப் பொதுச் செயலாளர் அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ, “குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தந்துள்ள கணக்குப்படி குவைத்தில் முறையான அனுமதியுடன் 10 லட்சம் இந்தியர்களும், விசா காலாவதியான நிலையில் 10 ஆயிரம் இந்தியர்களும் இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதக் கணக்கு.

இவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் மலையாளிகள். அவர்களுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறோம். அதற்கு அடுத்தபடியாக தெலுங்கர்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய மக்கள்தான் இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். வட இந்தியர்கள் மிகக் குறைவானவர்களே இருக்கிறார்கள்.

எங்களிடம் இருக்கும் கணக்குப்படி குவைத்தில் தமிழர்கள் சுமார் 1 லட்சம் பேர் இருக்கிறார்கள். எனவே, குவைத் இந்தியத் தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளையும் பணியமர்த்த வேண்டும் என நாங்கள் கடந்த 15 வருடங்களாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். இது தொடர்பாகப் பல முறை கடிதமும் எழுதிவிட்டோம். எங்களின் எந்தக் கடிதத்துக்கும் பதிலளிக்காத தூதரகம், ஒரே ஒருமுறை மட்டும் பதில் அனுப்பியது. அதில், ‘இந்த அலுவலகத்தில் பணியில் இருக்கும் மலையாளம் மற்றும் தெலுங்கு தெரிந்த அதிகாரிகளுக்குத் தமிழும் தெரியும் என்பதால் தனியாகத் தமிழ் அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியமில்லை’ என்று சொல்லப்பட்டிருந்தது.

பேச்சு வழக்கில் தமிழ் பேசுபவர்கள் பணியில் இருப்பதற்கும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைப் பணியில் அமர்த்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இருப்பினும் எங்களது கோரிக்கையை குவைத் இந்தியத் தூதரகம் கண்டுகொள்ளவே இல்லை. 2006-2008-இல் இந்தத் தூதரகத்தில் கணபதி என்ற தமிழர் தூதராக இருந்தார். அவரிடமும் எங்கள் கோரிக்கையைச் சொன்னோம். அவராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

இந்த நிலையில், இந்தியாவைப் போல இங்கேயும் இப்போது இந்தித் திணிப்பு வேலைகளை மெல்ல அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை தூதரகத்தின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பார்த்ததுமே, ''22 மொழிகள் இந்திய ஆட்சிமொழியாக இருக்கும்போது இந்திக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? இதேபோல், '#WordOfTamil' என்ற ஹேஷ்டேகை உருவாக்கித் தமிழையும் கற்றுக்கொடுக்க இந்தியத் தூதரகம் எங்களை எப்போது அழைக்கும்?'' என்று பதிவுகளைப் போட்டோம்.

வழக்கமாக முகநூல் மற்றும் ட்விட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் தூதுரகம் இதற்கு இதுவரை பதிலளிக்காமல் மவுனியாக இருக்கிறது. குவைத்தைத் தொடர்ந்து தற்போது மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் இதே பாணியில் இந்தி கற்பிக்க்கும் வேலைகளைத் தொடங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இது எதார்த்தமாக நடப்பதாகத் தெரியவில்லை. இந்தியைத் திணிப்பதற்காகத் திட்டமிட்டுச் செயலாற்றப்படும் காரியங்களாகவே தெரிகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x