Published : 18 Sep 2020 01:43 PM
Last Updated : 18 Sep 2020 01:43 PM
மதுரை சீர்மிகு நகரம்(ஸ்மார்ட் சிட்டி) என மாற இன்னும் 5 ஆண்டுகள் பிடிக்கும் என மக்களவையில் மத்திய வீட்டுவசதி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தகவல் அளித்தார். இது குறித்து மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற எம்.பியான சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி இருந்தார்.
மதுரை தொகுதி எம்.பியுமான அவரது கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறியதாவது: செப்டம்பர் 2016 இல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது சுற்றில் மதுரை நகரமானது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டது. ரூ.977.55 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 14 திட்டங்களில் ரூ.12 கோடி செலவிலான ஒரு திட்டம் முடிந்துள்ளது.
பாரம்பரிய வழிகள், தெருக்களின் வடிவம், பெரியார் பேருந்து நிலைய மறுமேம்பாடு, சுற்றுலா வசதிகள், வைகை ஆறு மேம்பாடு, மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையம், மண்டலம் 1,2,3,4 ஆகியவற்றின் தெரு விளக்கு நவீனமயம், பலதட்டுகளில் கார் நிறுத்தம், தண்ணீர் அளிப்பு பகிர்வு ஆகியன அமைக்கப்பட உள்ளது.
முல்லைப் பெரியார் அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் அளிப்பு மேம்பாடு, தமுக்கம் மைதானத்தில் கலையரங்கம், புதிய விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை ஆகிய ரூ.965.55 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்குவதற்கான வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவை 5 ஆண்டுகளில் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம். பழச்சந்தையில் கட்டுமான மற்றும் அடிப்படை வசதிகள் என்கிற ரூ.12 கோடி திட்டம் நடந்து முடிந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.-18-09-2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT