Published : 18 Sep 2020 12:18 PM
Last Updated : 18 Sep 2020 12:18 PM
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான பிரச்சாரம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) தன்னார்வலர்கள் குழு சார்பில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு மையத்தை தொடங்கி வைத்த அமைப்பின் முதன்மைச் சேவகரும், பாஜக மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை பிறகு செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இந்த தன்னார்வலர்கள் குழு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த நான்கைந்து மாதங்களாக விவசாயிகளை சந்தித்து வருகி றோம். விவசாயிகளை ஏன் ஒருங்கிணைக்க வேண்டும்,
அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை விவசாயிகளுக்கு விளக்கு வதற்காக இந்த ஒருங்கிணைப்பு மையம் தொடங்கப்படுகிறது.
முதல் மையம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து அரவக்குறிச்சி, தென்னிலை, குளித்தலை, கரூரில் இம்மையம் தொடங்கப்படும். அரசு மூலம் கிடைக்கும் சலுகைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதே இதன் முதல் நோக்கம். இது விவசாயிகளுக்கான பயிற்சி மையமாகவும் செயல்படும்.
இயற்கை விவசாயம், விவசாயத்தை நல்வழிப்படுத்துவதற்கான முறைகள் தெரிவிக்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். இதன் தாக்கம் ஒரு சில மாதங்களில் தெரியவரும்.
கரூரில் ஒரு இ-காமர்ஸ் நிறுவனம் தொடங்க பேசிக் கொண்டு உள்ளோம். ‘கரூர் கான்ட்’ என்ற பெயரில் கரூரில் உற்பத்தியாகும் பொருட்களை அந்த நிறுவனம் மூலம் வெளியார் வாங்கிக்கொள்ளலாம்.
நீட் தேர்வு மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நீட்டே பதில் தந்துள்ளது. நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்பதில்லை என்றனர்.
ஆனால், இந்த ஆண்டு தமிழக பாடத்திட்டத்தில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு, மேலும் தவறான பிரச்சாரம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT