Published : 18 Sep 2020 12:17 PM
Last Updated : 18 Sep 2020 12:17 PM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது.
திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சுவரொட்டிகளை ஒட்டுவதும், விளம்பரங்களை எழுதுவதுமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
போட்டிபோட்டு சாதி கட்சிகளும் சுவரொட்டிகளை ஒட்டிவந்ததால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன.
ஆனாலும் அவ்வப்போது சில அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் சுவரொட்டிகளை ஒட்டுவதும், மாநகராட்சிப் பணியாளர்கள் அவற்றை கிழித்து சுத்தம் செய்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் தமிழக முதல்வர் பழனிசாமி வந்திருந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் உள்ளிட்ட அவர் பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதையொட்டி அவரை வரவேற்பதற்காக ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் முழுக்க அதிமுகவினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில் அவற்றை மாநகராட்சி பணியாளர்கள் கிழித்து அப்புறப்படுத்தியதுடன், சுவரில் வெள்ளை பூசியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்துக்கு வந்தபோது மீண்டும் அதிமுகவினரால் அமைச்சரை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
ஆளுங்கட்சியினர் என்பதால் மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாததுபோல் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சுவரொட்டிகளை ஒட்டி ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரை அசிங்கப்படுத்தும் விவகாரம் தொடர்பாக இந்து தமிழ் நாளிதழில் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுவரொட்டிகளை அகற்றிவிட்டு, சுற்றுச்சுவரில் ஓவியங்களை மீண்டும் வரையும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT