Last Updated : 18 Sep, 2020 11:53 AM

 

Published : 18 Sep 2020 11:53 AM
Last Updated : 18 Sep 2020 11:53 AM

யானைகளால் சேதமடையும் அத்தியாவசியப் பொருட்கள்: நடமாடும் ரேஷன் கடை வால்பாறையில் அமையுமா?

கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட ரேஷன் கடை.

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் வால்பாறை யில் ரேஷன் கடைகளில் நுழையும்காட்டு யானைகள் அத்தியாவசியப் பொருட்களை சேதப்படுத்தும் சூழலில், நடமாடும் ரேஷன் கடை வசதி செய்துதரவேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட வால் பாறையில் செயல்படும் 48 ரேஷன் கடைகளில் 3 கடைகள் மட்டும் நகரப் பகுதியில் உள்ளன. மற்றவை எஸ்டேட் பகுதிகளில் அமைந்துள்ளன. மொத்தம் 17,335 ரேஷன் கார்டுகள் மூலம்மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இங்குள்ள தாய்முடி, சின்கோனா, கெஜமுடி, கருமலை, பன்னிமேடு, நல்லமுடி, ஹைபாரஸ்ட், பெரியகல்லாறு, மாணிக்கா எஸ்டேட் பகுதிகளில் ஆண்டுமுழுவதும் யானைகள் நடமாட்டம் இருக்கும்.

சில மாதங்களாக கருமலைஎஸ்டேட் பகுதியில் அதிக அளவில் யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களில் முகாமிடும் யானைகள், இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து, ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு மையங்களை இடித்து சேதப்படுத்துகின்றன. காட்டு யானைகளால் ஆண்டுதோறும் பல லட்சம் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் சேதமடைவதுடன், மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் முறையாக ரேஷன் பொருட்களை வழங்க முடியாதநிலை உருவாகிறது.

பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் மாதத்தில்ஒரு நாள் மட்டுமே ரேஷன்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால், மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே,யானைகள் நடமாடும் பகுதிகளில் ரேஷன்பொருட்களை விநியோகிக்க, நடமாடும் ரேஷன் கடைகளை அமைக்கவேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறும்போது, "சுமார் 220 சதுர கிலோ மீட்டர் பரப்புடன், தேயிலைத் தோட்டங்கள், மழைக்காடுகளைக் கொண்ட வால்பாறையில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

ஆனைமலை புலிகள்காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் யானைகளின் வலசைப் பாதையில் தேயிலைத் தோட்டங்கள், காபி தோட்டங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் மனித-விலங்கு மோதல் ஏற்படுவது தவிர்க்கஇயலாதது.

ஒரு சோலைக்காட்டிலிருந்து மற்றொரு சோலைக்காட்டுக்கு யானைகள் செல்லும்போது, வழியில் உள்ள ரேஷன் கடை, சத்துணவு மையங்களில்,காட்டு யானைகளுக்கு மிகவும்பிடித்த அரிசி, உப்பு ஆகியவை எளிதில் கிடைப்பதால், யானைகள் வன பகுதிகளுக்குள் செல்லாமல், எஸ்டேட் பகுதியிலேயே நிரந்தரமாக முகாமிடுகின்றன.ரேஷன்அரிசியைருசித்து சாப்பிடுவதற்காகத்தான் யானைகள் எஸ்டேட் பகுதிக்குள் நுழைகின்றன.

இதைத் தடுக்க அனைத்துப் பகுதிகளிலும் ரேஷன் பொருட்களை லாரியில் கொண்டு சென்று, மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். இதன் மூலம் யானைகள் எஸ்டேட் பகுதிகளில் நுழைவதையும், ரேஷன் கடைகளை சேதப்படுத்துவதையும் தவிர்க்க முடியும்" என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x