Published : 18 Sep 2020 11:25 AM
Last Updated : 18 Sep 2020 11:25 AM
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்தில் காய்கறி மற்றும் பழப் பயிர்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. தற்போது பெய்துவரும் மழையால், அதிக அளவில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக பந்தல் காய்கறிகளான பாகல், பீர்க்கன், தக்காளி, கத்தரி, வெங்காயம் மற்றும் அவரை பயிர்கள் பாதிக்கப்பட்டு, அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து, பல்லடம் வட்டம் கணபதிபாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உதவி வேளாண் இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆனந்தராஜா, பி.ஜி. கவிதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மழையால், காய்கறி பயிர்களை பாக்டீரியா வாடல் நோய், புகையிலை தேமல் நோய் அதிகமாக தாக்குகின்றன. மழை நீரில் எளிதில் வயல்களில் பரவி பயிர்களை பாதிக்க செய்கின்றன. பந்தல் காய்கறிகளைத் தாக்கும் சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய், தேமல் நோய் ஆகியவை அதிகமாக உள்ளன. வாடல் நோய் தாக்கம், நூற்புழுக்களால் அதிகமாகிறது. வெள்ளை ஈ, அஸ்வினி போன்ற சார் உறிஞ்சி பூச்சிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதுதொடர்பாக முனைவர் பி.ஜி.கவிதா கூறும்போது, "விதைக்கும் முன்பே நுண்ணுயிர்களான டிரைக்கோடெர்மா விரிடி, பர்பியூரி யோசிலியம் லீலா சினம் அல்லது கார்பன்டாசிம் ஆகியவற்றை கொண்டு, விதை நேர்த்தி செய்யப்பட வேண்டும். வயலைச் சுற்றிலும் மஞ்சள் நிற பூக்களை கொண்ட கேந்தி, சணப்பை ஆகியவற்றை பயிரிட வேண்டும்.
பயிர் சுழற்சி முறையை கட்டாயம் பின்பற்றுவதால், நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்க முடியும்.
வெட்டபில் சல்பர் கரைசலை அல்லது மேன்கோசெப் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் என்ற அளவில் கலந்து, கை தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மோனோகுரோட்டாபாஸ் அல்லது இமிடக்ளோபிரிட் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
நூற்புழுக்களை கட்டுப்படுத்த கேந்தி செடியை ஊடுபயிராகவும், வரப்பு பயிராகவும் இட வேண்டும். பொக்கோனியா கிளாமிடோஸ் போறியா என்ற பூஞ்சானத்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிர் உரங்கை பயன்படுத்த வேண்டும். வயலில் நீர் தேங்காதவாறு வடித்தல் மிகவும் அவசியம். இதனால், வேர் சம்பந்தப்பட்ட நோய்களை கட்டுப்படுத்தலாம்" என்றார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜாபூச்சி கூறும்போது, "நோய் தாக்குதலில் இருந்து காய்கறி மற்றும் தோட்டக்கலை பயிர்களை மேற்கண்ட முறைகளை கொண்டு கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு பொங் கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 9443444383 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment