Published : 14 Sep 2015 08:33 AM
Last Updated : 14 Sep 2015 08:33 AM

குவைத்தில் டிரைவர் வேலைக்கு சென்ற தமிழக இளைஞர்கள் ஒட்டகம் மேய்க்கும் பரிதாபம்: வாட்ஸ்அப் மூலம் பரவிய அதிர்ச்சி வீடியோ

கம்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் கொத்தடிமை வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் கதறும் அதிர்ச்சி வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குவைத்தில் ஓட்டுநர் பணிக்கு எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நேரத்துக்கு சாப்பாடு, ஊதியம் இல்லாமல் ஒட்டகம் மேய்க்கும் எங்களைக் காப்பாற்றுங்கள் என ‘வாட்ஸ் அப்’ மூலம் கதறும் பரிதாப வீடியோ காட்சி தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பரவி வருகிறது.

அந்த இளைஞர் கம்பம் தாத்தப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (26). இவரது மனைவி ஜாஸ்மின் பானு. நசுரீன் (ஐந்தரை), ஷர்கான் (இரண்டரை) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இவர் உட்பட இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் பணிபுரிகின்றனர்.

சதாம் உசேன், கடந்த 3 மாதங்களுக்கு முன் கும்பகோணத்தைச் சேர்ந்த காஜா என்பவர் மூலம், மாதம் ரூ.23,000 சம்பளத்துக்கு குவைத்தில் உள்ள முபாரக்கல் கபீர் என்ற இடத்துக்கு ஓட்டுநர் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன், குவைத் தொழிலதிபர் இவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டாராம். அடுத்த நாள் இவரை ஒட்டகம் மேய்க்க அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சதாம் உசேன் அப்பணியை செய்ய முடியாது என மறுத்தபோது, அவரை மிரட்டி ஒட்டகங்களை மேய்க்கும் வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக சொன்னபடி ஊதியமும் வழங்க வில்லை. நேரத்துக்கு சாப்பாடும் கிடைக்கவில்லை. பெற்றோர், உறவினர்களிடம் பேசவும் அவரை அனுமதிக்கவில்லை.

இதனால் அச்சமடைந்த சதாம் உசேன், ஒருநாள் நைசாக அங்குள்ள ஒருவரது கைபேசியை வாங்கி, குவைத்தில் ஒட்டகம் மேய்க்கும் தனது பரிதாப நிலை குறித்து வீடியோ எடுத்து தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி தமிழகத்தில் உள்ள தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் அனுப்பினார்.

ஒரு வேளை சாப்பாடு

அந்த வீடியோவில் சதாம் உசேன் கூறும்போது, குவைத்துக்கு டிரைவர் வேலைக்குதான் வந்தேன். காஜா, யாகூப் என்பவர்கள்தான் எனக்கு விசா வாங்கி அனுப்பி வைத்தார்கள். இவர்கள் என்னிடம் 1 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு இங்குள்ள அரபுக்காரர்களிடம் பணம் வாங்கியுள்ளனர். ஒட்டகம் மேய்க்க முடியாது என்றால் அரபுக்காரர்கள் அடித்துக் கொல்லப் பார்க்கிறார்கள்.

இப்போது இராக் எல்லையில் ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் ஒரு கடை கூட கிடையாது. ஒரு வேளை சாப்பாடுதான் போடுகிறார்கள். பட்டினியால் மிகவும் கஷ்டப் படுகிறேன். எப்படியாவது காப் பாற்றுங்கள்’’ என்றார்.

அந்த இளைஞர் தனது ஊர் கம்பம் என்று மட்டும்தான் கூறினார். தேனி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது உத்தரவால் போலீஸார் நேற்று தீவிர விசாரணையில் இறங்கி சதாம் உசேனின் மனைவி, பெற்றோரை கண்டுபிடித்தனர். அவர்களுக்கு சதாம் உசேனின் நிலை பற்றி போலீஸார் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

100 இளைஞர்கள் தவிப்பா?

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா கூறும்போது, ‘குவைத்தில் முறையான கல்வியில்லாமல் சென்றால் போன உடனே அவர்கள் சொன்ன வேலை, சம்பளம் கொடுக்க மாட்டார்களாம். மூன்று, நான்கு மாதம் கழித்துதான் அவர்கள் சொன்ன வேலையும் சம்பளமும் கொடுப்பார்களாம். இப்போது வாட்ஸ் அப்’பில் பேசிய சதாம் உசேனே, கம்பத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை, கும்பகோணம் காஜா என்பவர் மூலம் குவைத்துக்கு அனுப்பி உள்ளார்.

அவர்களில் பலர், இவரைப் போல சொன்ன ஊதியம் கிடைக்காமல் வீட்டுக்குத் திரும்பி உள்ளனர். ஆனால், ஓராண்டுக்கு முன் குவைத் சென்ற இவரது அண்ணன் இஸ்மாயில் நன்றாக சம்பாதித்ததால் இவரும் சென்றுள்ளார். இவரை ஓரிரு நாளில் தமிழகம் அழைத்து வர மாவட்டக் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்துள்ளோம்.

கம்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இவரைப் போல குவைத்தில் உள்ளனர். அவர்களுடைய உண்மை யான நிலையைப் பற்றியும் விசாரிக்கிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x