Published : 09 Sep 2015 02:35 PM
Last Updated : 09 Sep 2015 02:35 PM
கோவை மாவட்டம் நரசீபுரம் அருகே உள்ளது சவுக்காடு மலை கிராமம். இங்குள்ள குடிசை வீடுகளில் வாழும் இம் மக்கள், வன விலங்குகள் பீதியில் குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இவர்களது வீடுகளைச் சுற்றி ஒரு பர்லாங் தொலைவில் ஆங்காங்கே உள்ள விவசாய பூமிகளில் தனித் தனியாகவும் சில குடிசை வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளில் பெரும்பான்மையாக முதுவர்களும், குறைந்த எண்ணிக்கையில் இருளர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவருமே, இங்கிருந்து 5 கிமீ தொலைவில் மலை உச்சியில் உள்ள அணையம்மன் கோயில் அருகே நொய்யல் நதியை உருவாக்கும் நீராதாரங்களில் ஒன்றான நீலியாறு பிரியும் இடத்தில் பரம்பரை, பரம்பரையாக குடியிருந்து வந்தவர்கள். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான அங்கு குடியிருந்த இவர்களை, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சவுக்காடு அணையம்மன் கோயில் அருகே தாணிக்கண்டி மலைமக்கள் குடியிருப்புகளில் வசிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு இவர்கள் சம்மதிக்கவில்லை. இருப்பினும், அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதன் பேரில் சவுக்காடு ஓடையை ஒட்டி 2 கிமீ தூரத்துக்கு அப்பால் குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர்.
வன விலங்குகள் அச்சம் குறித்து இவர்கள் கூறியதாவது:
நாங்கள் சுமார் 27 குடும்பங்களில் 100 பேர் உள்ளோம். இப்போதுதான் குழந்தைகள் 6 பேர் 4 கிமீ தூரத்தில் நரசீபுரத்தில் உள்ள பள்ளிக்குச் செல்கின்றனர். மலையில் இருந்த வரை காட்டுப் பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தோம். இங்கே வந்த பிறகு அக்கம் பக்கத்தில் உள்ள தோட்டங்களில் கிடைக்கும் கூலி வேலை செய்து பிழைக்கிறோம். இங்கே யானை, காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது. கடந்த மாதம் முதல் சிறுத்தை ஒன்று அடிக்கடி வந்து தொல்லை தருகிறது. எங்களது வீடுகளுக்கு காவலாக இருந்த 5 நாய்களை சிறுத்தை பிடித்துச் சென்றுவிட்டது. இதனால் எந்நேரமும் பீதியில் உள்ளோம்.
இப்போது காட்டு யானைகள் தினமும் வந்து, தோட்டங்களில் உள்ள தேக்குச் செடிகளை உடைக்கிறது. வீடுகளில் உள்ள கூரை, காற்றில் பறப்பதோடு, யானைகளும் பிரித்து சேதப்படுத்துகிறது.
ஒரு நிரந்தர இடமும், பாதுகாப்பான வீடும் இருந்தால் வன விலங்கு பீதியில் இருந்து நிம்மதி கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மக்களுக்கு குடும்ப அட்டைகளும், வாக்குகளும் உள்ளன. போளுவாம்பட்டி முள்ளாங்காடு வாக்குச்சாவடியில் சென்று வாக்குப்பதிவு செய்யும் இவர்களுக்கு, தங்களது கவுன்சிலர் யார் என்பது தெரியவில்லை.
தெரு விளக்கு வசதி இல்லாமல், தற்போது வசிக்கும் இடம் குண்டும் குழியுமாக இருப்பதால் சிறுத்தை எளிதாக குடியிருப்புப் பகுதிக்கு வந்துவிடுவதாகவும், குழந்தைகளை சிறுத்தை பிடித்துச் சென்றுவிடுமோ என்ற பீதியில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
வன விலங்குகளிடம் இருந்து தங்களையும், குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள சமதளமான ஒரு நிலம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த மக்களின் நிலை குறித்து தாணிக்கண்டி பகுதியின் முன்னாள் வனக்குழு தலைவர் பழனிச்சாமி கூறும்போது, ‘இந்த மக்கள் இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது சில மாதங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. அரசு சலுகைகள் பெறும் வழிமுறைகள் கூட இவர்களுக்குத் தெரியவில்லை. இங்கு வசிப்பவர்களில் ஒருவர் மட்டும் வேட்டைத் தடுப்புக் காவலராக உள்ளார். அவரிடம் பேசியபோதுதான் இவர்களது வசிப்பிடம், நிலைமை தெரியவந்தது.
இவர்களுக்கு புறம்போக்கில் நிலப் பட்டாவும், தொகுப்பு வீடும் பெற முயற்சி எடுத்து வருகிறோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT