Published : 21 Sep 2015 12:21 PM
Last Updated : 21 Sep 2015 12:21 PM
காங்கயம் அருகே நூற்பாலையில் இருந்து 25 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, திருப்பூரில் தங்கவைக்கப்பட்டனர்.
காங்கயம் அருகே உள்ள ஓலப்பாளையத்தில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு, 400-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நூற்பாலையில் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவின் பேரில், தாராபுரம் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சி. அசோக்குமார் மேற்பார்வையில், தொழிற்சாலை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு துணை இயக்குநர் வி.புகழேந்தி, உதவி தொழிலாளர் நல ஆய்வாளர் ஏ.இளங்கோவன், சைல்ட்லைன் என்.ஆறுச்சாமி, காங்கயம் வட்டாட்சியர் ராஜகோபால், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் எம்.கலையரசி ஆகியோர் கொண்ட தனிப்படை நேற்று ஆய்வு செய்தது.
இதில், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைத் தொழிலாளர்கள் 25 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் குழந்தைகள் நலக்குழு முன் ஆஜர்படுத்தப்பட்டு, திருப்பூரில் உள்ள மரியலா குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட பெண் குழந்தைத் தொழிலாளர்கள், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, குடியாத்தம், ஆம்பூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாராபுரம் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி 'தி இந்து'விடம் கூறும்போது, 'மீட்கப்பட்டவர்களில் ஒரு சிறுமி கொடுத்த பாலியல் புகார் குறித்து, காங்கயம் மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT