Published : 17 Sep 2020 09:58 PM
Last Updated : 17 Sep 2020 09:58 PM
கரோனா தடுப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி வரும் 22-ம் தேதி தூத்துக்குடி வருகிறார்.
இதனை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கரோனா தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
மேலும், அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கியும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி வரும் 22-ம் தேதி தூத்துக்குடி வருகிறார்.
அன்று காலை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் பிற்பகல் 3 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
அதில் பங்கேற்கும் முதல்வர், பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். தொடர்ந்து இரவு உணவை தூத்துக்குடியில் முடிக்கும் முதல்வர் பழனிச்சாமி, இரவே நாகர்கோவில் செல்கிறார்.
அங்கு இரவில் தங்கும் அவர், மறுநாள் (செப்.23) காலை 9.30 மணிக்கு நடைபெறும் கன்னியாகுமரி மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
முதல்வர் வருகையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய சாலை அமைத்தல், பூங்காக்களை சீரமைத்தல், புதிய வண்ணம் பூசுதல், பந்தல் அமைத்தல், பூச்செடிகள் வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலேயே கரோனா வைரஸ் தீவிரத்தை திறம்பட கட்டுப்படுத்திய அரசு தமிழகம் தான்.
குறிப்பாக கரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் தான் மிகக் குறைவு. 0.6 சதவீதம் பேர் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பலியாகியுள்ளனர். முதல்வர் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் வரும் 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வர உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மட்டுமல்லாமல், அரசு சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் நிலை குறித்தும் அவர் துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். மேலும், முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்வரே ஒவ்வொரு துறையின் பணிகளையும் ஆய்வு செய்ய களபணிக்கு சென்ற ஒரே முதல்வர் தமிழக முதல்வர் தான் என்பதை சட்டசபையில் எதிர்கட்சிகளே ஒத்து கொண்டுள்ளன என்றார் அமைச்சர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT