Published : 17 Sep 2020 08:15 PM
Last Updated : 17 Sep 2020 08:15 PM
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகளில் திடீர் கெடுபிடியால் நகைக் கடன் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
கரோனா ஊரடங்கால் பலரும் வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகின்றனர். இதனால் கடன் தவணைத் தொகையை வசூலிப்பதில் கடுமை காட்டக் கூடாது என, மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் நகைக் கடன்களில் வட்டியை மட்டும் செலுத்துமாறு அடகு வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகள் நகைக்கடனில் கெடுபிடி காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இளையான்குடி அருகே சூராணத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் வட்டி, கடன்தொகை முழுவதையும் செலுத்தி அடகு வைத்த நகைகளை முழுமையாக திருப்பி கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு வாரம் கழித்தே மறு அடகு வைக்க வேண்டுமென, கெடுபிடி காட்டப்படுவதாக பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் சிவகங்கையில் உள்ள தேசிய கிராம வங்கி ஒன்றில் அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கான காலக்கெடு முடியும் நாளுக்கு முந்தைய நாளே திருப்பி கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் குறிப்பிட்ட நபர்களை மட்டுமே நகைகளை திருப்ப அனுமதிக்கின்றனர். மற்றவர்களை தேதி குறிப்பிடாமல் திருப்பி அனுப்புகின்றனர்.
மறுநாள் சென்றாலும் திருப்புவதற்கான தேதி முடிந்துவிட்டதாக கூறி, கூடுதல் வட்டி வசூலிக்கின்றனர். இதனால் நகை கடன் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் கூறுகையில், ‘சூராணம் தேசிய வங்கியில் சூராணம், மாரந்தை, ஏரிவயல் ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். கரோனாவால் கிராமங்களில் பலருக்கும் வருவாய் குறைந்துள்ளது.
இதனால் வட்டி செலுத்துவதே அவர்களுக்கு சிரமமாக உள்ளது. அவர்கள் வட்டி செலுத்தி நகைகளை மறுஅடகு வைக்க சென்றால், முழுத்தொகையையும் செலுத்த சொல்லி வற்புறுத்துகின்றனர்,’ என்று கூறினார்.
இதுகுறித்து முன்னோடி வங்கி மேலாளர் நிலவழகன் கூறுகையில், ‘‘ புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT