Published : 17 Sep 2020 07:09 PM
Last Updated : 17 Sep 2020 07:09 PM
ஆறுகளில் நாட்டின மீன் உற்பத்தியைப் பெருக்கிடும் திட்டத்தின் கீழ் மேட்டூர் அரசுப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட கல்பாசு மற்றும் கெண்டை மீன் விரலி மீன் குஞ்சுகள் சுமார் 4 லட்சம் எண்ணிக்கை அளவுக்கு மேட்டூர் காவிரி ஆற்றில் விடப்பட்டன.
உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கிடவும், நாட்டின மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடவும், மீன்வளத் துறை மூலம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, உள்நாட்டு மீன் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், நாட்டின மீன் குஞ்சுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து அவற்றை காவிரி, பவானி, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் விட்டு மீன் வளத்தைப் பெருக்கிட, தமிழக அரசு ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மீன் பண்ணையில் வளர்த்தெடுக்கப்பட்ட சுமார் 4 லட்சம் கல்பாசு மற்றும் காவிரி கெண்டை மீன் விரலி மீன் குஞ்சுகளை மேட்டூர் தெர்மல் பாலம் அருகே காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி இன்று (செப். 17) நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில், கல்பாசு மற்றும் கெண்டை மீன் விரலி மீன் குஞ்சுகள் ஆகியவை காவிரி ஆற்றில் விடப்பட்டன.
இதுகுறித்து ஆட்சியர் ராமன் கூறுகையில், "காவிரியில் விடப்படும் மீன் குஞ்சுகள் பன்மடங்கு பெருகி, பெரிய மீன்களாக வளர்ச்சியடைந்த பின்னர், இம்மீன்களை மீனவர்கள் பிடித்து, விற்பனை செய்யும்போது அவர்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கைத் தரமும் மேம்படும். மேலும், மக்களுக்கும் சுத்தமான, சுகாதாரமான நாட்டின மீன் ரகங்கள் எளிதில் கிடைக்கும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன், மீன் வளத்துறை உதவி இயக்குநர் கொளஞ்சிநாதன், மேட்டூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, மேட்டூர் வட்டாட்சியர் சுமதி, மீன்வள ஆய்வாளர் ரத்தினம், மீன் வள சார் ஆய்வாளர்கள் கவிதா, வேலுச்சாமி, மேற்பார்வையாளர் ரவி, மேட்டூர் அணை மீனவர் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, 4 லட்சம் மீன் குஞ்சுகளில் மேட்டூர் காவிரி ஆற்றில், கல்பாசு மற்றும் காவிரி கெண்டை ரக மீன்கள், எம்ஜிஆர் பாலம் பகுதியில் தலா 75 ஆயிரம், காவிரி கிராஸ், காவிரி பாலம், செக்கானூர், தூக்கணாம்பட்டி ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் தலா 25 ஆயிரம், பண்ணவாடி பகுதியில் கல்பாசு 15 ஆயிரம், காவிரி கெண்டை 10 ஆயிரம், காரைக்காடு பகுதியில் கல்பாசு 10 ஆயிரம் என மொத்தமாக 4 லட்சம் மீன் குஞ்சுகள் காவிரியில் விடப்பட்டன.
மேட்டூர் அணையில் 90 அடிக்கும் மேலாக நீர் இருப்பதும், அணையில் இருந்து காவிரியில் பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரியில் நாட்டின மீன் குஞ்சுகள் 4 லட்சம் எண்ணிக்கை அளவுக்கு விடப்பட்டுள்ளன. இதனால், காவிரியில் மீன் வளம் பெருகும் என்பதால், காவிரிக் கரையோர மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT